"அசாம் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு தோல்வி காத்திருக்கிறது" - பிரதமர் மோடி

"அசாம் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு தோல்வி காத்திருக்கிறது" - பிரதமர் மோடி
Updated on
1 min read

நாகான்: இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலின்போது அசாம் மக்களிடமிருந்தும் காங்கிரஸுக்கு ஒரு கடுமையான பதில் கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நாகான் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசிரங்கா மேம்பாலத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும், இரண்டு புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தும் பேசிய பிரதமர் மோடி, "ஆட்சியை பிடிப்பதற்காகவும், வாக்குகளைப் பெறுவதற்காகவும் காங்கிரஸ் கட்சி அசாமின் மண்ணை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்தது. காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக அசாமில் ஆட்சியில் இருந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் ஊடுருவல் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

காங்கிரஸுக்கு ஒரே ஒரு கொள்கைதான் உள்ளது, ஊடுருவல்காரர்களைக் காப்பாற்றுவது. ஊடுருவல்காரர்களின் உதவியுடன் அதிகாரத்தைப் பெறுவது. நாடு முழுவதும் காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகளும் இதைத்தான் செய்து வருகின்றன.

பிஹாரிலும், அவர்கள் ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்தனர். ஆனால் பிஹார் மக்கள் காங்கிரஸை முற்றிலுமாகத் துடைத்தெறிந்தனர். இப்போது அசாம் மக்களின் முறை. அசாம் மண்ணிலிருந்தும் காங்கிரஸுக்கு ஒரு கடுமையான பதில் கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இப்போது அசாமில், பாஜக அரசாங்கம் ஊடுருவல் பிரச்சினையை திறம்படக் கையாண்டு வருகிறது. மேலும் உங்கள் நிலத்தை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்து வருகிறது. சமீபத்தில் வந்துள்ள தேர்தல் முடிவுகளில், மக்களின் ஆணை மிகவும் தெளிவாக உள்ளது. இப்போது வாக்காளர்கள் நல்லாட்சியையும், வளர்ச்சியையும் விரும்புகிறார்கள். அதனால்தான் நாங்கள் மும்பையில் வெற்றிபெற்றதற்கான கொண்டாட்டங்கள் காசிரங்காவில் நடைபெறுகின்றன.

காசிரங்கா ஒரு தேசியப் பூங்கா மட்டுமல்ல, அது அசாமின் ஆன்மா. ஒரு காலத்தில், காசிரங்காவில் காண்டாமிருக வேட்டை அசாமிற்கு ஒரு பெரிய கவலையாக இருந்தது. 2013-14 ஆம் ஆண்டில், டஜன் கணக்கான ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டன. பாஜக அரசாங்கம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தீர்மானித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி, வனத்துறைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியது. இதன் விளைவாக, 2025 ஆம் ஆண்டில் காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்ட சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை” என்றார்

"அசாம் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு தோல்வி காத்திருக்கிறது" - பிரதமர் மோடி
“கோவளம் நன்னீர் தேக்க திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்” - சீமான்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in