

மணிகண்டன் ஐஏஎஸ்
புதுடெல்லி: தமிழ்நாட்டின் நெய்வேலியைச் சேர்ந்த தமிழரான டாக்டர்.ஏ.மணிகண்டன், 2017ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற உ.பி. மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி. நாட்டிலேயே மருந்தியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஐஏஎஸ் அதிகாரியான இவர், உ.பி.யின் பரேலி வளர்ச்சி ஆணையத்தின் (பிடிஏ) துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தார்.
பரேலியில் மணிகண்டன் பதவி ஏற்றது முதல், பல வளர்ச்சித் திட்டங்களும் அந்நகரில் அமலாகின. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ‘நாத் காரிடார்' என்ற கனவு திட்டத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் பாராட்டைப் பெற்றன. இதேபோல், பொதுமக்களுக்கான ராம்கங்கா நகர் வீட்டு வசதித் திட்டம், கிரேட்டர் பரேலி வீட்டு வசதித் திட்டம், முதல்வர் மாதிரி ஒருங்கிணைந்த பள்ளி மற்றும் விளையாட்டு வளாகம் போன்றவற்றை அமல்படுத்தினார்.
குறிப்பாக, பரேலியில் ருத்ரவனம் எனும் பூங்காவை சர்வதேச அளவில் முன்னிருந்து அமைத்திருந்தார். இதனுள், ராமாயண் வாட்டிகா எனும் புதிய அம்சத்தையும் உருவாக்கி, முதல்வர் யோகியின் பாராட்டைப் பெற்றார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், நகரில் கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப் பட்டவர்களின் சட்டவிரோதக் கட்டுமானங்களை இடித்துத் தள்ளியதன் மூலம் அவர் மாநிலம் முழுவதும் கவனத்தை ஈர்த்தார்.
சட்டவிரோதக் கட்டுமானங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களில் அலட்சியம் காட்டுவோருக்கு எதிரான செயல்பாடுகள் அதிகாரி மணிகண்டனிடம் அதிகம் இருந்தன. இதனால் பல நிர்வாக அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் விமர்சனங்களுக்கும் இலக்கானார். இதையடுத்து, பரேலி நகரை விரிவு படுத்தும் நோக்கில், பிலிபித் பைபாஸ் சாலையில் உள்ள மகாதேவ்புரம் வீட்டுவசதித் திட்டம் மற்றும் டெல்லி சாலையில் உள்ள தொழிற்பேட்டை ஆகியவற்றுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை அவர் துரிதப்படுத்தினார்.
பரேலிக்கு முதல்வர் யோகியின் வருகையை முன்னிட்டு, ‘ராமாயண வாடிகா'வைத் திறந்து வைப்பதற்கும், மகாதேவ்புரம் வீட்டு வசதித் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் அவர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இருப்பினும், உ.பி. அரசு அவரை திடீரென பிடிஏவின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நேற்று விடுவித்துள்ளது. அந்தப் பதவியில் அவரது பேட்ச்மேட்டான ஐஏஎஸ் சவுமியா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். பரேலியில் பல வளர்ச்சித் திட்டங்களை செய்தவர் மணிகண்டன் என்பதால் அவரது மாற்றம் சர்ச்சைக்கு உள்ளாகி விட்டது.