வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு
Updated on: 
1 min read

புதுடெல்லி: இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 28 முதல் 30 வரை நடைபெறவிருந்த 3 நாள் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திங்கள்கிழமை முதல் வங்கிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலைநாட்களாக அறிவிக்கப்பட வேண்டும் மற்றும் அனைத்துச் சனிக்கிழமைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற வங்கி ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஆராய உயர்மட்டக் குழு உடனடியாக அமைக்கப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இக்குழு வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, சாத்தியமான மாற்று வழிகளை ஆராய்ந்து முடிவெடுக்கும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகாரிகளுக்கான செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், 2024 மார்ச் 8 ஒப்பந்தத்தில் உள்ள நிலுவைக் கோரிக்கைகள் குறித்தும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.

அரையாண்டு கணக்கு முடிக்கும் செப்டம்பர் இறுதியில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்ததால் வங்கிச் சேவைகள் பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் திங்கள்கிழமை முதல் வங்கிச் சேவைகள் வழக்கம் போல் தடையின்றித் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு
தீவிரவாதத்துக்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in