உயிரிழந்த சகோதரியின் கணக்கில் இருந்த ரூ.19,300-ஐ தர மறுத்த வங்கி நிர்வாகம்: எலும்புக் கூடுடன் சென்ற சகோதரனால் பரபரப்பு

உயிரிழந்த சகோதரியின் கணக்கில் இருந்த ரூ.19,300-ஐ தர மறுத்த வங்கி நிர்வாகம்: எலும்புக் கூடுடன் சென்ற சகோதரனால் பரபரப்பு
Updated on
1 min read

கியோஞ்கர்: ஒடிசா மாநிலத்தில் உயிரிழந்த தனது சகோதரியின் வங்கிச் சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ.19,300 பணத்தை எடுப்பதற்காக, இறப்பு ஆதாரத்துக்காக அவரின் எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து வங்கிக்குச் சுமந்து வந்த அண்ணனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கியோஞ்கர் மாவட்டம் தியானாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீத்து முண்டா (50). இவரது சகோதரி கக்ரா முண்டா கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார். கக்ராவின் கணவர் மற்றும் ஒரே மகனும் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், ஜீத்து முண்டா மட்டுமே அவரது ஒரே உறவினராக இருந்துள்ளார்.

மலிபோசி பகுதியில் உள்ள ஒடிசா கிராமீன் வங்கிக் கிளையில் கக்ரா முண்டா கணக்கு வைத்திருந்தார். அதில் சுமார் 19,300 ரூபாய் இருப்பு இருந்தது. இந்தப் பணத்தை எடுப்பதற்காக ஜீத்து முண்டா பலமுறை வங்கிக்குச் சென்றுள்ளார். ஆனால், முறையான இறப்புச் சான்றிதழ் அல்லது வாரிசுச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் அதிகாரிகள் பணம் தர மறுத்துள்ளனர். மேலும், கணக்கு வைத்திருப்பவரை நேரில் அழைத்து வாருங்கள் என்று அதிகாரிகள் அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

உடலைத் தோண்டி எடுத்து..

படிக்காத பழங்குடியினரான ஜீத்து முண்டாவுக்குச் சிக்கலான வங்கி நடைமுறைகள் புரியவில்லை. அதிகாரிகளின் பதிலால் விரக்தியடைந்த அவர், திங்கள்கிழமை சுடுகாட்டிற்குச் சென்று புதைத்த தனது தங்கையின் உடலைத் தோண்டி எடுத்துள்ளார். எஞ்சியிருந்த எலும்புக்கூட்டை ஒரு துணியில் சுற்றி தோளில் சுமந்தபடி சுட்டெரிக்கும் வெயிலில் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து வங்கிக்கு வந்து சேர்ந்தார்.

இந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வங்கியின் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வறுமையில் வாடும் ஏழை மக்களிடம் கனிவுடன் நடந்துகொள்வதை விட்டுவிட்டு, அதிகாரிகள் ஆவணங்களுக்காக அலைக்கழிப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து ஜீத்து முண்டாவைச் சமாதானப்படுத்தினர். பின்னர் அந்த எலும்புக்கூடு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர் கடும் கண்டனம் இதுகுறித்து ஒடிசா மாநில அமைச்சர் சுரேஷ் புஜாரி கூறுகையில், “வங்கி ஊழியர்களின் இந்த மனிதாபிமானமற்ற அணுகுமுறை கண்டிக்கத்தக்கது. இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

உயிரிழந்த சகோதரியின் கணக்கில் இருந்த ரூ.19,300-ஐ தர மறுத்த வங்கி நிர்வாகம்: எலும்புக் கூடுடன் சென்ற சகோதரனால் பரபரப்பு
‘பான் வேர்ல்டு’ வெளியீட்டுக்கு தயாராகும் இந்திய படங்கள்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in