

மனஸ் பாஜ்பாய், திவ்யா மிஸ்ரா
லக்னோ: மனைவி, சகோதரியை சுட்டுக் கொன்ற வங்கி அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் மனஸ் பாஜ்பாய். எஸ்பிஐ வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி திவ்யா மிஸ்ரா, ஐசிஐசிஐ வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில், மனைவி திவ்யா வேலை பார்க்கும் ஐசிஐசிஐ வங்கிக்கு நேற்று காலை சென்ற மனஸ் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பிய மனஸ், உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது சகோதரியை சுட்டுக்கொலை செய்துவிட்டு, தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்பாக மனஸ் தனது செல்போனில் வாட்ஸ்அப் செயலியில் ஒரு குறிப்பை எழுதி வைத்திருந்தார். அதில்,“என் மனைவி என்னை ஏமாற்றியதால் அவரை சுட்டுக் கொலை செய்தேன். இப்போது என் சகோதரியை கொலை செய்துவிட்டு, நானும் தற்கொலை செய்துகொள்ள போகிறேன். என்ன நடந்தது என்பது என் மனைவியின் சகோதரி பிராக்யாவுக்கு தெரியும்.” என குறிப்பிட்டுள்ளார். திவ்யாவின் சகோதரி பிராக்யா பிரபல யூடியூபர் என்பது குறிப்பிடத்தக்கது.