மும்பை: மும்பையின் சதாரா பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞரும் நவிமும்பையை சேர்ந்த 19 வயது பெண்ணும் காதலித்து வருகின்றனர். தனது காதலியை பார்க்க அந்த இளைஞர் நேற்று மும்பைக்கு வந்தார். மும்பை குர்லா மேற்கு பகுதியில் உள்ள பீனிக்ஸ் மாலுக்கு இருவரும் சென்றனர். பின்னர் அங்குள்ள மாநகராட்சி பூங்காவை சுற்றிப் பார்த்தனர்.
அப்போது காதல் ஜோடியை சுமார் 16 வயதுடைய சில சிறுவர்கள் கேலி, கிண்டல் செய்து துன்புறுத்தினர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிறுவர்கள், கம்புகள், கற்களால் காதல் ஜோடி மீது கொடூர தாக்குதலை நடத்தினர்.
ஒரு சிறுவன் இளைஞரின் முகத்தில் ஓங்கி குத்தினான். இதில் நிலைகுலைந்த இளைஞரை, ஒரு சிறுவன் பின்னால் இருந்து வேகமாக எட்டி உதைத்தான். ஒரு சிறுவன் ஸ்டீல் பாட்டில் மூலம் இளைஞரின் தலையில் பலமாக தாக்கினான். சிறுவர்கள் கும்பல், பூங்காவுக்குள் காதல் ஜோடியை ஓட, ஓட துரத்தியது. இந்த தாக்குதலில் இளைஞரும், இளம்பெண்ணும் காயமடைந்தனர். இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
காதல் ஜோடியை சிறுவர்கள் கொடூரமாக தாக்கியதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட இளைஞர் மும்பை காட்கோபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தாக்குதல் நடத்திய சிறுவர்களை தீவிரமாக தேடினர். சில மணி நேர தேடுதல் வேட்டையில் 8 சிறுவர்கள் பிடிபட்டனர். அவர்கள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து மகாராஷ்டிர பாஜக மூத்த தலைவர் கிரித் சோமையா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பீனிக்ஸ் மால் அருகே உள்ள பூங்காவில் இந்து நண்பர்கள் மீது முஸ்லிம் அடிப்படைவாத கும்பல் கொடூர தாக்குதலை நடத்தி உள்ளது. இதுதொடர்பாக 8 சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. போலீஸ் சார்பில் 5 சிறுவர்களின் பெற்றோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.