

புதுடெல்லி: தேசியப் பாதுகாப்பைச் சுட்டிக்காட்டி அமெரிக்க வர்த்தக துறை ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் அடிப்படையில், தனது அதிநவீன 'பேபிள் 5' மற்றும் 'மைத்தோஸ் 5' ஏ.ஐ. மாடல்களை எந்த ஒரு வெளிநாட்டினரும் பயன்படுத்த ஆந்த்ரோபிக் நிறுவனம் தடை செய்துள்ளது. ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து சோஹோ இணை நிறுவனரும் முன்னாள் சிஇஓ-வுமான ஸ்ரீதர் வேம்பு சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இன்றைய உலகில் தொழில்நுட்பமே இறுதி ஆயுதம். தேசிய இறையாண்மை, தேசியப் பாதுகாப்பு என அனைத்தும் இப்போது தொழில்நுட்பத்தைச் சார்ந்தே உள்ளன. உலக மயமாக்கல் முடிவுக்கு வந்துவிட்டது. இந்தியா இனி தனது சொந்த இறையாண்மை கொண்ட ஏ.ஐ. திறன்களை உருவாக்க வேண்டும்.
மேலும், இந்திய மற்றும் சீன ஓப்பன் சோர்ஸ் மாடல்களை நிறுவனங்கள் பயன்படுத்த அரசு வழிவகை செய்ய வேண்டும். இந்த தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை தீவிரப்படுத்த வேண்டும்.
மேம்பட்ட ஏ.ஐ. உலகில் நுழைய 100 பில்லியன் டாலருக்கு மேல் நிதியும், கடுமையான பற்றாக்குறை நிலவும் மேம்பட்ட ஜிபியு-களும் தேவைப்படும். நம்மால் பணம் திரட்ட முடிந்தாலும், ஜிபியு-களை பெற முடியாது.
எப்படி இருந்தாலும் இதற்கு அரசிடம் பெரும் நிதி கோரப் போவதில்லை. ஸர்வம் மற்றும் சோஹோ போன்ற நிறுவனங்கள் இதில் ஏற்கெனவே ஆராய்ச்சி செய்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.