

மும்பை: இன்டர்ன்ஷிப் என்பது வேலைவாய்ப்புக்கான முன் அனுபவ பயிற்சி ஆகும். அதாவது ஒரு கல்லூரி மாணவர் தனது கல்வித் தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்ட நிறுவனத்தின் இன்டர்ன்ஷிப்பில் சேர்ந்து குறுகிய காலம் பணியாற்றுவார்.
இந்நிலையில், மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தி ஹாபி டிரைப் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் இன்டர்ன்ஷிப் பயிற்சியில் 64 வயது முதியவர் ஒருவர் இணைந்து உள்ளார். கர்நாடகாவின் மங்களூருவை சேர்ந்த இளைஞர் ஜோசுவா சாலின்ஸ் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இதன் சார்பில் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் மற்றும் தனி நபர்களுக்கு பொழுதுபோக்கு சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக இசைக் கருவிகளை இசைப்பது, ஆடல் - பாடல் - நடனம், ஓவியம் வரைவது, புகைப்படம் எடுப்பது, அபாகஸ், நாட்டுப்புற கலைகள் ஆகியவை ஆன்லைன் மூலமாகவும் நேரடி வகுப்புகள் மூலமாகவும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
இந்நிறுவனத்தில் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். அவர்களோடு நிறுவனத்தின் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் 64 வயது முதியவரும் இணைந்திருக்கிறார்.
இதுகுறித்து நிறுவன தலைவர் ஜோசுவா சாலின்ஸ் கூறும்போது, “எங்கள் நிறுவனத்தில் தற்போது 64 வயது நபர், இன்டர்ன் ஆக எங்களோடு இணைந்திருக்கிறார். ஓய்வுக்குப் பிறகு வீட்டில் ஓய்ந்திருக்க அவர் விரும்பவில்லை. அவரது திறமை, அனுபவங்களை இளம் தலைமுறையோடு பகிர்ந்து கொள்ள எங்கள் நிறுவனத்தில் இணைந்திருக்கிறார்" என்றார்.
64 வயது முதியவர் துடிப்புடன் பணியாற்றுவது, சக இளம் ஊழியர்களுக்கு பாடம் எடுப்பது தொடர்பான வீடியோவை ஜோசுவா சாலின்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.