

புதுடெல்லி: இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மே 24-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஏப்ரல் 30-ம் தேதி, இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால் இந்தியாவுக்கு முன்னதாகவே, மே 24 முதல் இத்தகைய தடையை பாகிஸ்தான் விதித்தது. பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.
இரு நாடுகளும் தங்கள் வான்வெளியை மற்ற நாட்டின் விமானங்களுக்கு மூடுவதற்கான தடையை கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் மாறி மாறி நீட்டித்து வருகின்றன. பாகிஸ்தான் தனது வான்வெளி தடையை கடந்த செவ்வாய்க்கிழமை மே 24 வரை நீட்டித்தது.
இந்நிலையில் மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்ட விமானிகளுக்கான அறிவிப்பு (NOTAM) ஒன்றில் ”பாகிஸ்தான் விமானங்கள் (ராணுவ விமானங்கள் உட்பட) இந்திய வான்வெளியை பயன்படுத்த இயலாது. இந்த தடை மே 23ம் தேதி 23:59 மணி (UTC) வரை அமலில் இருக்கும். இந்திய நேரப்படி (IST) மே 24ம் தேதி காலை 05:30 மணி வரை அமலில் இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. இரு நாடுகளின் இந்த நடவடிக்கை ஓராண்டாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 தீவிரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியா தாக்கி அழித்தது. மேலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.