உ.பி., மேற்கு வங்க மாநிலங்களை அடுத்து டெல்லியில் பக்ரீத்துக்குப் பலியிட கட்டுப்பாடு

உ.பி., மேற்கு வங்க மாநிலங்களை அடுத்து டெல்லியில் பக்ரீத்துக்குப் பலியிட கட்டுப்பாடு
Updated on
1 min read

புதுடெல்லி: இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை மே 28-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் இறைவனின் பெயரில் முஸ்லிம்கள் கால்நடைகளை பலியிடுவது வழக்கம். உ.பி.யில் சில பகுதிகளில் தெருக்கள், சந்துக்களிலும் பலியிடப்பட்டது. அதன்பின், கடந்த 2017-ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தது முதல் பொதுவெளியில் பலியிட தடை செய்யப்பட்டது. இது சர்ச்சையானது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சுவேந்து அதிகாரியும், கால்நடை பலியிட கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதற்கு ஏஜேயுபி கட்சித் தலைவர் ஹுமாயூன் கபீர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து ஹுமாயூன் கபீர் கூறுகையில், “முஸ்லிம்களில் பலர் மாட்டிறைச்சி உண்கின்றனர். முதலில் இறைச்சிக் கூடங்களை மூட வேண்டும். மாட்டிறைச்சி ஏற்றுமதியால் மத்திய அரசு பணம் ஈட்டுகிறது. அதற்கு தடை விதிக்கப்படுமா? நான் நேரடியாக முதல்வருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். நெருப்புடன் விளையாட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

தற்போது பாஜக ஆளும் டெல்லி அமைச்சர் கபில் மிஸ்ரா, “கால்நடைகள், பசுக்கள், கன்றுகள், ஒட்டகங்கள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட விலங்குகளைப் பலியிடுவது முற்றிலும் சட்டவிரோதமானது. அவ்வாறு செய்வோர் மீது குற்றவியல் வழக்குகள் தொடரப்படும். அனுமதிக்கப்பட்ட விலங்குகளை சட்டப்பூர்வமான இடங்களில் மட்டுமே பலியிட அனுமதிக்கப்படும். பொதுவெளியில் பலியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லியில் சாலைகள், தெருக்களில் பலியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது” என்று அறிவித்துள்ளார். பக்ரீத் பலியிடுதலுக்குப் பிறகு கழிவுகளைச் சாக்கடைகள், வடிகால்கள் அல்லது பொது இடங்களில் கொட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சட்டவிரோத விலங்கு வதை, அங்கீகரிக்கப்படாத விலங்கு வர்த்தகம் ஆகியவற்றுக்கு எதிராக அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். விலங்குகளின் நலன், பொதுச் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பலியிட அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கபில் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.

உ.பி., மேற்கு வங்க மாநிலங்களை அடுத்து டெல்லியில் பக்ரீத்துக்குப் பலியிட கட்டுப்பாடு
அபிஷேக நேரத்திலும் சாமானிய பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in