“காவி உடைக்கே இழுக்கு” - பாபா ராம்தேவ் மீது கங்கனா சாடல்

“காவி உடைக்கே இழுக்கு” - பாபா ராம்தேவ் மீது கங்கனா சாடல்
Updated on
1 min read

புதுடெல்லி: “பெண்கள் குறித்து பாபா ராமதேவ் பேசிய பேச்சுகள் நாகரிகத்தின் எல்லை மீறியதாக உள்ளது,” என பாஜக எம்பி கங்கனா ரனாவத் சாடியுள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்களை ‘சாக்கடைத் தலைமுறை’ என்று பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் விமர்சித்திருந்தார். இதற்கு திரையுலகிலும், பொதுவாழ்விலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

குறிப்பாக, “ஒருவரது கடந்த காலத்தையும், இளமையையும் வைத்துப் பார்த்தால், அவருக்கு மற்றவர்களை விமர்சிக்கத் தகுதியில்லை” என்று கங்கனாவை பாபா ராம்தேவ் மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

இதையடுத்து கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில், “பாபா ஜி, என்னுடைய இளமைப் பருவத்தைப் பற்றியோ அல்லது படுக்கையறையைப் பற்றியோ பகல் கனவு காண்பதை நிறுத்துங்கள். வதந்திகள் அடிப்படையில் மட்டுமே ஒருவர் எதையும் கற்பனை செய்ய முடியும்.

ஆனால், போலி விளம்பரங்களை வெளியிட்டு உச்ச நீதிமன்றத்திடம் நான் ஒருபோதும் கண்டனம் வாங்கியதில்லை. எனவே எனக்கு ஒழுக்கம் பற்றிய பாடங்களைச் சொல்லித்தர வேண்டாம். உங்களை விட என்னுடைய ஒழுக்கம் மிகவும் மேலானது,” என்று பதஞ்சலி நிறுவனத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகளைக் சுட்டிக்காட்டி சாடியுள்ளார்.

மேலும், “ஒரு பெண்ணைப் பற்றி பாபா ராம்தேவ் கூறிய கருத்துகள் சமூகத்தையே தலைகுனிய வைத்துள்ளன. இதன்மூலம் அவர் நாகரிகத்தின் எல்லையை மீறியதுடன் தனது காவி உடைக்கே இழுக்கு ஏற்படுத்திவிட்டார்,” என்றும் கங்கனா விமர்சனம் செய்தார்.

இதற்கு பாபா ராம்தேவ், “சுவாமி ராம்தேவ் யார், இந்த நாட்டுக்கு அவரது பங்களிப்பு என்ன என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, இத்தகைய தகுதி படைத்த மனிதர்களைப் பற்றி நான் எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை,” என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

“காவி உடைக்கே இழுக்கு” - பாபா ராம்தேவ் மீது கங்கனா சாடல்
பிஹாரில் மாணவர் போராட்டம் தீவிரம் - ‘மக்கள் மாளிகை’யை முற்றுகையிட முயன்றதால் பதற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in