

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ராம் ஷங்கர் யாதவ் (எ) டின்னு மற்றும் அவரது சகோதரி மகன் மனிஷ் யாதவ் ஆகியோரைப் போலீஸார் நேற்று அயோத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இவர்கள் இருவரையும் 7 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அனுமதி கோரப்பட்டது. அதை ஏற்ற நீதிமன்றம், இருவரிடமும் 39 மணி நேரம் விசாரணை நடத்த அனுமதி அளித்தது. இதையடுத்து, ராமர் கோயிலில் திருடப்பட்ட மொத்தத் தொகை, யாரெல்லாம் உடந்தை, ஒட்டுமொத்த திருட்டுக்கு பின்னணியில் உள்ளவர்கள் என்பது குறித்து சிறப்பு விசாரணைக் குழுவினர் (எஸ்ஐடி) விசாரிக்க உள்ளனர்.
ஏற்கெனவே போலீஸார் நடத்திய விசாரணையில் ராமர் கோயில் திருட்டை இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், டின்னுவிடம் இதுவரை வெறும் ரூ.1 லட்சம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோயிலில் நடந்த முறைகேடுகள் அனைத்துக்கும் மூலக் காரணமாக டின்னு இருந்துள்ளார். அவரிடம்தான் நன்கொடை பணம், நகைகள் வைக்கும் பெட்டிகளின் சாவிகள் இருந்துள்ளன.
திருட்டு விவகாரம் வெளியில் கசிந்த பிறகு ஸ்ரீ ராமர் கோயில் தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையில் காணிக்கைகள் எண்ணும் பணி கோயிலின் அடித்தள அரங்குக்கு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன், காணிக்கை எண்ணும் பணிகளை சிசிடிவி கேமராக்கள் மூலம் பக்தர்களும் பார்வையிடும் வகையில் பெரிய எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது.
காணிக்கை எண்ணும் பணியைக் கண்காணிக்க ராணுவம், காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்ஐஎஸ் மற்றும் பிபிஐஎஸ் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எஸ்ஐடி அறிக்கை
கோயில் காணிக்கை திருட்டை விசாரித்து வரும் எஸ்ஐடி விரைவில் தனது அறிக்கையை உ.பி. அரசிடம் சமர்ப்பிக்கும் என்று தெரிகிறது. அறக்கட்டளை முன்னாள் நிர்வாகி டாக்டர் அனில் மிஸ்ரா மீதும் சந்தேகம் எழுந்துள்ளது. இவரது பரிந்துரையால் காணிக்கை பொறுப்பாளராக இருந்த சுபாஷ் ஸ்ரீ வத்ஸவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு நெருக்கமான சுபாஷ் கோயிலில் திருடியதை மிஸ்ரா கண்டுகொள்ளவில்லை என்று அவர் மீது புகார் உள்ளது.
காணிக்கை திருட்டு மிகப்பெரிய தவறு என்று ஒப்புக் கொண்டுள்ள அறக்கட்டளை, அதற்கு மன்னிப்பு கோரும் வகையில் சிறப்பு பூஜைகள் நடத்தினர். கோயில் வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மொத்தம் 70 வேத விற்பன்னர்கள் இதில் பங்கேற்றனர். பத்து நாட்களுக்கான இந்த பிராயச்சித்த வழிபாடு, கருவறை மற்றும் சுற்றுச்சுவர் பகுதிகளில் நடைபெறுகிறது. வேதபாராயணம், ஹவனம், ருத்ராபிஷேகம் மற்றும் ராமார்ச்சனை ஆகியவை நடைபெறுகின்றன.