அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி |கோப்புப் படம்
புதுடெல்லி: போக்சோ வழக்கில் முன்ஜாமீன் கோரி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
உத்தராகண்ட்டில் உள்ள ஜோதிர்மடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியாரான அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, அவரது சீடர் முகுந்தானந்த் பிரம்மச்சாரி, மேலும் இரண்டு அல்லது மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் ஆகியோர் ஒரு சிறுவர் உட்பட இருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அசுதோஷ் பிரம்மச்சாரி என்றும், மற்றவர் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதியின் குருகுல மாணவர் என்றும், இருவரும் தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போக்சோ நீதிமன்ற உத்தரவை அடுத்து, ஜன்சி காவல் நிலையத்தில் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, அவரது சீடர் முகுந்தானந்த் பிரம்மச்சாரி உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழும், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் வேறு சில பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி முதல் கடந்த 15-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பாலியல் அத்துமீறல்கள் நடந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதியை கைது செய்ய உத்தரப் பிரதேச போலீஸார் அவரது மடத்துக்குச் சென்றனர். இதன் காரணமாக, கைது செய்யப்படாமல் இருக்க அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, ‘‘பசு வதை தடைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாங்கள் தொடர்ந்து மக்களைச் சந்தித்து வருகிறோம். இந்த அரசு நாங்கள் மத தலைவர்களாக மட்டுமல்லாமல், அரசுக்கு ஆதரவானவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. நாட்டில் நான்கு சங்கராச்சாரியார்கள் இருக்கிறோம். சனாதன தர்மத்தை நாங்கள் எப்போதும் காத்து வருகிறோம். இப்போது அவர்கள் எங்களை தாக்க தொடங்கி இருக்கிறார்கள்.
உண்மை ஒருபோதும் மறையாது. அது எப்போதும் இருக்கும். பசு வதைக்கு எதிரான குரலை நாங்கள் தொடர்ந்து உயர்த்துவோம். இன்னும் சத்தமாக எங்கள் குரலை நாங்கள் ஒலிக்கச் செய்வோம். ஆட்சியாளர்கள் மக்களின் கவனத்தை திசை திருப்ப ஏதாவது செய்ய வேண்டும் என்று இப்படி செயல்படுகிறார்கள்.
பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். நான்கு சங்கராச்சாரியார்களும் சந்தித்து, பசு பாதுகாப்பு இயக்கத்தை நாங்கள் நடத்தி வருகிறோம். அவர்கள் கூறும் மாணவர் எங்கள் குருகுலத்தைச் சேர்ந்தவர் அல்ல.
காவல் துறையினருக்கு எதிராக நாங்கள் எதையும் செய்யமாட்டோம். முழு ஒத்துழைப்பை அளிப்போம். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பொய்கள் தானாக வெளியே வரும். இன்று இல்லாவிட்டால் நாளை, நாளை இல்லாவிட்டால் நாளை மறுநாள் இந்த கதைகள் எல்லாம் பொய் என்பது நிரூபணமாகும்’’ என தெரிவித்துள்ளார்.