

அசாம் மாநிலம் நவ்போய்சா நகரில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூடியிருந்த கட்சித் தொண்டர்கள். படம்: பிடிஐ
குவாஹாட்டி: அசாமில் பெண்கள் தொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் ஒரு குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அசாமில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று வெளியிட்டார்.
நவ்போய்சா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கார்கே பேசியதாவது: அசாமில் பாஜக அரசு தற்போது பெண்களுக்கு நிபந்தனையுடன் மாதாந்திர நிதியுதவி வழங்குகிறது. குறிப்பாக அந்தப் பயனைப் பெற பாஜக உறுப்பினராக இருக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் எந்த நிபந்தனையுமின்றி அனைவருக்கும் இந்தப் பலன்கள் கிடைக்கும்.
சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் மதிப்பிலான ரொக்கமில்லா மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஏற்கெனவே இத்தகைய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.
தற்போதைய அரசைப் போல ஆண்டுதோறும் நிலப் 'பட்டா' (உரிமை ஆவணங்கள்) வழங்குவதற்குப் பதிலாக, 10 லட்சம் 'பூமிபுத்திரர்களுக்கு' (பூர்வீகக் குடிமக்கள்) நிரந்தர பட்டா வழங்குவோம். இதன் மூலம் மக்கள் ஆண்டுதோறும் தங்கள் ஆவணங்களைப் புதுப்பிக்கவோ அல்லது அதிகாரிகளிடம் சலுகை கேட்டு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அலைந்து திரியவோ வேண்டியதில்லை. கர்நாடகாவில் நாங்கள் ஏற்கெனவே 6,80,000 பேருக்கு நில ஆவணங்களை வழங்கியுள்ளோம்.
மாநிலத்தில் உள்ள அனைத்து முதியவர்களுக்கும் மாதம் ரூ.1,250 வழங்கப்படும். எனவே, வாக்காளர்கள் காங்கிரஸை ஆதரித்து, அசாமில் பாஜக அரசின் தவறான ஆட்சி மற்றும் ஊழலில் இருந்து மாநிலத்தை விடுவிக்க உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.