

அமித் ஷா
குவாஹாட்டி: அசாம் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 90-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெறவுள்ள அசாம் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் வருகை தந்த அவர், குவாஹாட்டியில் பிரம்மாண்டமான சாலைப் பேரணியைத் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமித் ஷா கூறியதாவது : அசாம் மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக என்டிஏ அரசை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் உறுதியாக நாங்கள் 90-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான ஆட்சியில் இம்மாநிலத்தில் மிகப்பெரிய வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன. உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒருகாலத்தில் அசாமில் நிலவிய தீவிரவாதம், குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளன.
தற்போது மாநிலத்தின் சுகாதாரக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களின் கல்வி மற்றும் சுகாதார மையமாக அசாம் உருவெடுத்துள்ளது. இவ்வாறு அமித் ஷா கூறினார். அசாம் மாநில சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதியும் நடைபெறவுள்ளன.
தற்போதுள்ள சட்டப்பேரவையில் பா.ஜ.க.வுக்கு 64 எம்எல்ஏ. க்கள் உள்ளனர். அதன் கூட்டணிக் கட்சிகளாக அஸ்ஸாம் கன பரிஷத் (9), ஐக்கிய மக்கள் லிபரல் கட்சி (7) மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி (3) ஆகியவை உள்ளன.
எதிர் தரப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 26 இடங்களும், ஏஐயுடிஎஃப். கட்சிக்கு 15 இடங்களும் உள்ளன. 2023 தொகுதி மறுவரையறைக்குப் பிறகு அசாமில் நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.