

புதுடெல்லி: காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பரப் பிரிவுத் தலைவர் பவன் கெரா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), எகிப்து, ஆன்டிகுவா ஆகிய 3 நாடுகளின் பாஸ்போர்ட்களை வைத்திருக்கிறார். அத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்காவில் அவர் சில தொழில்களை நடத்தி வருவதுடன் சொத்துகளை வைத்துள்ளார்.
இது பற்றி எல்லாம் சர்மா தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். மேலும் ரினிகி இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளாரா மற்றும் அவரது குடியுரிமை என்ன என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மேலும், சர்மாவைக் கைது செய்ய வேண்டும். தேர்தலில் போட்டியிட அவருக்குத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து ஹிமந்த பிஸ்வா சர்மா கூறும்போது, “பவன் கேரா என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தீய எண்ணம் கொண்ட, புனையப்பட்ட மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட பொய்கள். அசாம் மக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்டவை. எனவே அவர் மீது நானும் என் மனைவியும் அடுத்த 48 மணி நேரத்தில் குற்ற மற்றும் அவதூறு வழக்கு தொடுக்க உள்ளோம்" என்றார்.