

புதுடெல்லி: டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வசித்து வந்த, பாஜகவால் ‘ஷீஷ் மஹால்’ (கண்ணாடி மாளிகை) என விமர்சிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய அரசு பங்களா, அடுத்த வாரம் முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது.
டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் முதல்வராக பதவி வகித்தபோது அவர் தங்குவதற்காக சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள 6, பிளாக்ஸ்டாஃப் சாலையில் ஷீஷ் மஹால் புதுப்பிக்கப்பட்டது. இந்த பங்களாவில், 2024-ம் ஆண்டு வரை அர்விந்த் கேஜ்ரிவால் வசித்து வந்தார்.
2025 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது, கேஜ்ரிவால் ஆட்சிக் காலத்தில் இந்த பங்களாவில் மேற்கொள்ளப்பட்ட ஆடம்பரப் புதுப்பிப்புப் பணிகளை முக்கியத் தேர்தல் பிரச்சாரமாக பாஜக முன்னெடுத்தது. இதனால், சட்டப்பேரவை தேர்தலின்போது புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட அர்விந்த் கேஜ்ரிவாலை பர்வேஷ் வர்மா தோற்கடித்தார்.
இதுகுறித்து பர்வேஷ் வர்மா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஷீஷ் மஹால் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட உள்ளது. அடுத்த வாரம் முதல் டெல்லி மக்கள் இதைப் பார்வையிடலாம். இதற்கான டிக்கெட் முன்பதிவு நடைமுறைகள், நுழைவுக் கட்டணம் மற்றும் பார்வையிடும் நேரங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
அதற்கு முன்னதாக, அடுத்த 2 அல்லது 3 நாட்களில் பத்திரிகையாளர்களுக்கு பங்களாவைச் சுற்றிக் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதற்கான விவரங்கள் புதன்கிழமை (இன்று) அறிவிக்கப்படும். இவ்வாறு பர்வேஷ் கூறினார்.