

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள இ20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று டெல்லியில் பிரதமர் இல்லம் நோக்கி பேரணி நடத்தினர். அவர்களை போலீஸார் நடுவழியிலேயே தடுத்து நிறுத்தினர். படம்: பிடிஐ
புதுடெல்லி: எத்தனால் கலந்த இ20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் கட்சித் தொண்டர்கள் நேற்று பேரணி நடத்தினர்.
பெட்ரோலில் 20 சதவீதம் அளவுக்கு எத்தனால் கலந்து இ20 என விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று கோரி டெல்லியில் நேற்று பிரதமர் மோடியின் இல்லம் நோக்கி ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, கட்சியின் பிற தலைவர்கள், தொண்டர்கள் இணைந்து பேரணியாகச் சென்றனர்.
அப்போது நடுவழியில் அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் சாலையோரம் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியதாவது: இ20 பெட்ரோல் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தலையீடு உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் நெருக்கடிக்குப் பயந்து பிரதமர் மோடி செயல்பட கூடாது என்று நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன். அமெரிக்காவிடம் இருந்து எத்தனால் வாங்குவது நிறுத்தப்பட வேண்டும். நம்முடைய நாட்டில், எத்தனால் கலப்பு பெட்ரோல் திணிப்பை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளைப் பிரதமர் மோடி செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி எங்களை அழைத்து பேசுவார் என நம்புகிறேன். அவரைச் சந்திக்க வேண்டும் என்று நாங்கள் தகவல் அனுப்பி இருக்கிறோம். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். இ20 பெட்ரோல் பயன்படுத்துவதால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக கோடிக்கணக்கான வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இ20 பெட்ரோலை பயன்படுத்துவதால் பிரச்சினை வருகிறது என்று பொதுமக்கள் கூறிய போதும், அந்த பெட்ரோலைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது ஏன்? சாதாரண பெட்ரோல் அல்லது இ20 பெட்ரோல் இவற்றில் எதை வாங்குவது என்பதற்கான வாய்ப்பைப் பெட்ரோல் நிலையங்களில் நுகர்வோருக்கு வழங்க வேண்டும். இதைத்தான் நாங்கள் கேட்கிறோம். மேலும், இ20 பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும். இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.