

பப்பு யாதவ் கைது
புதுடெல்லி: பிஹாரின் சுயேச்சை எம்.பியான பப்பு யாதவ் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பப்பு யாதவ் என்று பிரபலமாக அறியப்படும் ராஜேஷ் ரஞ்சன், பிஹார் மாநிலம் பூர்ணியா தொகுதியின் சுயேச்சை மக்களவை உறுப்பினராக உள்ளார். இவர் 1995-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஒரு நிலத் தகராறு வழக்கு தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட உடனேயே, அதிகாரிகள் பப்பு யாதவை இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் அவர் ஸ்ட்ரெச்சரில் பாட்னா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜீவ் குமார் சிங், பப்பு யாதவுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
பப்பு யாதவ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "பாட்னாவில் நீட் தேர்வு எழுதவிருந்த ஒரு மாணவி மர்மமான சூழ்நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்ததும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும், இந்த ஆட்சியில் உள்ள ஆழமான சீரழிவை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் விசாரணையைத் திசைதிருப்பவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைத் துன்புறுத்தவும், குற்றவாளிகளைப் பாதுகாக்க அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தவும் பாஜக - என்டிஏ கூட்டணி முயற்சிக்கிறது.
அந்த மகளுக்கு நீதி கோரி உறுதியாகக் குரல் கொடுத்த சக மக்களவை உறுப்பினர் பப்பு யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைது, அரசின் பொறுப்புக்கூறலைக் கோரும் ஒவ்வொரு குரலையும் அச்சுறுத்தி அமைதியாக்கும் நோக்கில் செய்யப்பட்ட ஒரு அரசியல் பழிவாங்கல் செயல் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இளம்பெண்கள் தொடர்ந்து வன்முறைக்கு பலியாகி வரும் நிலையில், அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த பயங்கரமான யதார்த்தங்கள் குறித்து அலட்சியமாக இருப்பது ஒரு கவலைக்குரிய போக்கு. இது அரசியல் அல்ல; இது நீதிக்கான கேள்வி. இது பிஹாரின் மகள்களின் மரியாதை மற்றும் பாதுகாப்பு தொடர்பான கேள்வி" என்று ராகுல் கூறியுள்ளார்.
நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வந்த ஒரு மாணவி, ஜனவரி மாத தொடக்கத்தில் பாட்னாவின் சித்ரகுப்த் நகரில் உள்ள தனது விடுதி அறையில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். பல நாட்கள் கோமாவில் இருந்த அவர், ஜனவரி 11 அன்று ஒரு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், பின்னர் அது மறைக்கப்பட்டதாகவும் அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க பிஹார் அரசு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.