

புதுடெல்லி: பொது விநியோக திட்டத்தில் 2.12 கோடி போலி பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் நுகர்வோர் மற்றும் உணவுத் துறை இணையமைச்சர் நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: பொது விநியோகத் திட்டத்தில் சந்தேகத்திற்குரிய பயனாளிகள் பட்டியலை மத்திய அரசு தயாரித்தது. இதில் 8.51 கோடி பேர் இடம்பெற்றிருந்தனர். இந்தப் பட்டியல் கள ஆய்வுக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் பட்டியலில் இருந்து இதுவரை 2.12 கோடி போலி பயனாளிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நீக்கியுள்ளன. இதன்மூலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியுள்ள பயனாளிகளுக்கு இடம் கிடைத்துள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.