

லக்னோ: ஆரவல்லி மலைத்தொடரை பாதுகாக்க வேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்திய நிலையில், அதன் 90% பாதுகாக்கப்பட்ட பகுதிதான் என மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று கூறும்போது, “ஆரவல்லி மலைத்தொடர் டெல்லிக்கு ஒரு இயற்கை கேடயமாக செயல்படுகிறது. குறிப்பாக காற்று மாசைக் குறைப்பதிலும், வெப்பநிலையைச் சீராக்குவதிலும், மழை பெய்யவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, ஆரவல்லி மலைத்தொடர் உயிர்ப்புடன் இருந்தால்தான், தலைநகரும் உயிர்ப்புடன் இருக்கும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், சூழலியல் சமநிலையை மீட்டெடுப்பதற்கும் இந்த மலைத்தொடர் அவசியமாகிறது.
இந்நிலையில், ஆரவல்லி மலைத்தொடர் பகுதியில் சட்டவிரோத சுரங்கத் தொழில் மற்றும் நிலத்தின் மீதான தணிக்கையற்ற பேராசை ஆகியவை டெல்லியை உலகின் மிக மோசமான மாசு தலைநகராக மாற்றிக் கொண்டிருக்கின்றன. எனவே, ஆரவல்லி மலைத்தொடரை பாதுகாக்க வேண்டியது அவசியம்” என்றார்.
இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் நேற்று கூறும்போது, “ஆரவல்லி மலைத்தொடர் பகுதியில் 90% பகுதி பாதுகாக்கப்பட்டவைதான். உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்டமைப்பானது, இந்த மலைத்தொடருக்கு வலுவான பாதுகாப்பை வழங்குகிறது. குறிப்பாக, ஒரு விரிவான மேலாண்மை திட்டம் இறுதி செய்யப்படும் வரை புதிய சுரங்க குத்தகை ஒப்பந்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மொத்தம் உள்ள 1.44 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் வெறும் 0.19% பகுதியில் மட்டுமே இப்போது சுரங்கப் பணிகளை மேற்கொள்ள தகுதி பெற்றுள்ளது. மற்ற பகுதிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. எனவே, பொய்யான தகவல் பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.