

புதுடெல்லி: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைதாகி உள்ளார். அங்கித் என்ற இந்த நபரை, மும்பை காவல்துறையினர் பரோடாவில் கைது செய்துள்ளனர்.
மும்பையின் ஜுஹு பகுதியில் நடிகர் டைகர் ஷெராப் மீது அக்டோபர் 18ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். அவரது ஓட்டுநர் உள்ளிட்ட மேலும் இருவரும் காயமடைந்தனர்.
துப்பாக்கி சூடு நடத்திய மூவரை, ராஜஸ்தான் காவல்துறையினர் அக்.19-ம் தேதி ராஜஸ்தானின் கோட்டா நகரில் கைது செய்தனர். அக்.20-ம் தேதி டெல்லி காவல்துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பெண்கள் உள்ளிட்ட மேலும் 4 பேரை கைது செய்தனர்.
இந்த நால்வரும் ஷெராப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு ஆயுதங்களை பஞ்சாபிலிருந்து கொண்டுவந்து சேர்த்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை எட்டாவதாக அங்கித் என்ற நபர் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரோடாவில் கைது செய்யப்பட்ட இவர், ஷெராப்பின் துப்பாக்கிச் சூடு சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தவர் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய அனில் பண்டிட், அங்கித் மூலமாகவே பணபறிமாற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
இவர், நேபாளம் வழியாக அனில் பண்டிட்டுடன் பணப் பரிவர்த்தனைகள் செய்ததாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த பரிவர்த்தனைகளின் தன்மை மற்றும் நோக்கம் குறித்து விசாரணை நடைபெற உள்ளது.
நடிகர் டைகர் ஷெராபின் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் முதலாவதாகக் கைதான 3 முக்கிய குற்றவாளிகளும் கோட்டாவிலிருந்து நேற்று மும்பைக்கு கொண்டு வரப்பட்டனர்.
சாலை மார்க்கமாகக் கொண்டு வரப்பட்ட அவர்களுக்கு மும்பையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர், விசாரணைக்காக மும்பை குற்றப்பிரிவின் மிரட்டி பணம் பறிக்கும் தடுப்புப் பிரிவுக்கு (Anti-Extortion Cell - AEC) அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.