

தாவூத் இப்ராஹிமின் டி கம்பெனி இந்தியாவை சேர்ந்தது என குறிப்பிட்ட ஐநா சிறப்பு அறிக்கையாளரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி, தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில்தான் உள்ளார் என்பதை சுட்டிக்காட்டினார்.
ஐநா பொதுச் சபையின் மூன்றாவது குழு கூட்டத்தில் நேற்று (புதன்கிழமை) அறிக்கை சமர்ப்பித்த ஐநா சிறப்பு அறிக்கையாளர் பென் சால், இந்தியாவை சேர்ந்த டி கம்பெனி அமைப்பின் தலைவர் தாவூத் இப்ராஹிமை அல்கொய்தாவுடன் தொடர்புடையவர் என 2003-ம் ஆண்டு ஐநா பாதுகாப்பு கவுன்சில் பட்டியலிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
ஐநாவுக்கான இந்திய நிரந்தர தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் ரகு பூரி, இந்த அறிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் தனது பதிலில், “ஐநா சிறப்பு அறிக்கையாளர் உண்மைகளுக்குப் புறம்பான தவறுகளைக் கொண்ட அறிக்கைகளை வெளியிடுவதும் அதற்காக அவர் பொறுப்பக்கூறல் இன்றி தொடர்வதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது குறித்து நாங்கள் ஏற்கெனவே பிற தளங்களிலும் எங்கள் தீவிர கவலையை தெரிவித்துள்ளோம்.
ஏற்கெனவே நம்பகத்தன்மை குறித்த சவால்களை எதிர்கொண்டு வரும் ஐநா பேன்ற ஓர் அமைப்பின் இத்தகைய அறிக்கை, உறுப்பு நாடுகளை ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளுகிறது. அந்த அறிக்கையில் உள்ள சில மிக முக்கிய தவறுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
டி கம்பெனி அமைப்பு இந்தியாவை சேர்ந்தது என்று விவரித்ததை முற்றிலுமாக நாங்கள் நிராகரிக்கிறோம். தாவூத் இப்ராஹிமும் அவர் தலைமையிலான கிரிமினல் கும்பலும் 1993ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக தேடப்படும் நபர்களாக உள்ளனர்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தடை ஆணைக்கான காரணங்களை விளக்கும் ஆவணத்திலேயே இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உண்மையை குறிப்பிடாதது வருத்தத்தக்குரியது. சிறப்பு அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் இத்தகைய திறமையின்மை, இந்த அமைப்புக்கு பெரும் தீங்கினை விளைவிக்கிறது.
இந்த நபர் (தாவூத் இப்ராஹிம்) 2003-ல் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டார். அவர் நாட்டுக்கு வெளியே இருந்த அந்த காலகட்டத்தில்தான், அல்கொய்தா மற்றும் ஒசாமா பின்லேடனுடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
தாவூத் இப்ராஹிம் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாகவே தொடர்ந்து நீடிக்கிறார். ஐநா பட்டியலின்படி, ஒசாமா பின்லாடன் கண்டறியப்பட்டு கொல்லப்பட்ட அதே நாட்டில்தான் அவரும் வசிக்கிறார்.” என்று தெரிவித்தார்.
ஒசாமா பின்லாடன் 2011-ல் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் அமெரிக்க கடற்படை சிறப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.