

கொல்கத்தா/புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், "தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் ஒரு பஹல்காம் தாக்குதலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதா?" என முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மம்தாவின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடியா மாவட்டத்தில் உள்ள பெதுவாடஹரி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியதாவது: பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் காஜா ஆசிப், கொல்கத்தாவைத் தாக்குவோம் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், கூச் பெஹார் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, ஏன் இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கவில்லை? இதன் பின்னணி என்ன? தேர்தலுக்கு முன்பாக மீண்டும் ஒரு பஹல்காம் தாக்குதலை நடத்த ஏதேனும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதா? மத்திய அரசு மேற்கு வங்க மக்களைக் குறிவைத்தால், அதனை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம். இந்தியக் குடிமக்களாகிய நாங்கள் இதுபோன்ற மிரட்டல்களைச் சகிக்க மாட்டோம். நீங்கள் (பிரதமர்) ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் பதவி விலக வேண்டும். இவ்வாறு மம்தா பேசினார்.
பாஜக பதிலடி: மம்தாவின் இந்தப் பேச்சுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பாகிஸ்தான் தீவிரவாதிகளால் அப்பாவி இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட பஹல்காம் தாக்குதலை ஒரு 'நாடகம்' அல்லது 'திட்டமிடப்பட்ட ஒன்று' என மம்தா பானர்ஜி திரித்து கூறுகிறார். வாக்கு வங்கி அரசியலுக்காக திரிணமூல் காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு இதுவே சாட்சி. திரிணமூல் ஒரு இந்து விரோதக் கட்சி" எனக் குறிப்பிட்டுள்ளார்.