

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணியில் 500-க்கும் மேற்பட்ட கீழ் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் வழக்கு விசாரணைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்துச் சிறப்பு அரசு வழக்கறிஞர் பிவாஸ் சாட்டர்ஜி கூறுகையில், "கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் சந்தேகத்திற்குரியவை என வகைப்படுத்தப்பட்ட பெயர்களை ஆய்வு செய்யும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் (எஸ்ஐஆர்) 500 நீதிபதிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் விளைவாக, கடந்த 2025-ம் ஆண்டில் 62 சதவீதமாக இருந்த கீழ் நீதிமன்றங்களின் வழக்குத் தீர்வு விகிதம், இந்த மார்ச் மாதத்தில் 42 சதவீதமாக சரிவை சந்தித்துள்ளது. இதனால் வழக்குகளைத் தீர்த்து வைக்கும் வேகம் பெருமளவு குறைந்து கோப்புகள் தேங்குவது அதிகரித்துள்ளது.
மாவட்ட நீதிமன்ற தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் மாநிலம் முழுவதும் 90,685 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், அவற்றில் 38,527 வழக்குகள் மட்டுமே முடித்து வைக்கப்பட்டுள்ளன. கொல்கத்தாவில் இந்த விகிதம் இன்னும் மோசமாக 39 சதவீதமாக உள்ளது. மேற்கு வர்த்தமானில் மிகக் குறைந்த அளவாக 19 சதவீத வழக்குகள் மட்டுமே தீர்க்கப்பட்டுள்ளன.
விசாரணை தாமதம்: ஏராளமான நீதிபதிகள் தேர்தல் பணியில் இருப்பதால் கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழான முக்கிய வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிணை மனுக்கள் மீதான விசாரணையும் தாமதமாகிறது. விரைவு நீதிமன்ற நீதிபதி, தற்போது கூடுதல் பொறுப்பாக நான்கைந்து நீதிமன்றங்களைக் கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் விசாரணைக்குத் தேதிகள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது" என்றார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23 மற்றும் 29 தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாக உள்ளன.