அமித் ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு - பாஜகவில் இருந்து விலகுவது குறித்து விளக்கமா?

அமித் ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு - பாஜகவில் இருந்து விலகுவது குறித்து விளக்கமா?
Updated on
1 min read

புதுடெல்லி: தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். பாஜகவில் இருந்து தான் விலகுவதற்கான காரணம் குறித்து அவர் நேரில் விளக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக உள்ளதாக கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்த நிலையில், நேற்று (ஜூன் 1) செய்தியாளர்கள் இது குறித்து கேட்டபோது, 'இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள். உட்கார்ந்து விரிவாகப் பேசுகிறேன். உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் பதில் சொல்கிறேன். நிச்சயம் இரண்டு நாட்களில் பேசுகிறேன்' என தெரிவித்தார்.

இதனிடையே, அவரது ஆதரவாளர்கள் ‘தலைவா வா! தரணி ஆள வா!’ என கோவை மாநகரின் பல பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை அதன் தொடர்ச்சியாக அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷையும் அவர் சந்தித்துள்ளார். மேலும், ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்கள் சிலரையும் அவர் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

பாஜகவில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை அண்ணாமலை இ-மெயில் மூலம் கட்சித் தலைமைக்கு ஏற்கெனவே அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்புகளின்போது, தனது முடிவுக்கான காரணங்கள் குறித்து அவர் விளக்கியதாகத் தெரிகிறது. எனினும், இது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

நிதின் நபின், பி.எல். சந்தோஷ், அமித் ஷா, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அனைவருமே அவர் கட்சியில் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர். எனினும், தனது முடிவில் தான் உறுதியாக இருப்பதாக அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜூன் 4-ம் தேதி அண்ணாமலையின் பிறந்த நாள் என்பதால், அன்றைய தினம் புதிய அரசியல் கட்சியை தொடங்குவது குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கும் அண்ணாமலைக்கும் நல்ல நட்பு உள்ளது. அண்ணாமலை கட்சி தொடங்கினால் அதற்கு ரஜினிகாந்த்தின் வெளிப்படையான ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்மிகத்தையும் தேசியத்தையும் மையமாகக் கொண்டதாக புதிய கட்சி இருக்கும் என்றும், இது தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை டெல்லிக்கு வருமாறு கட்சித் தலைமை அவசர அழைப்பு விடுத்துள்ளதாகவும், இதையடுத்து அவர் டெல்லிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமித் ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு - பாஜகவில் இருந்து விலகுவது குறித்து விளக்கமா?
“பதவிகளை அனுபவித்துவிட்டு அதிமுகவை அழிக்க நினைப்போர் எண்ணம் ஈடேறாது” - பழனிசாமி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in