

அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஜெகன் மோகன் அரசு, மின்சார உற்பத்தி திட்டங்களுக்காக மக்களிடம் மின் கட்டணத்தை உயர்த்தி, ரூ.9 ஆயிரம் கோடி வரை செலவிட்டது. ஆனால் தற்போது மின் கட்டணத்தை உயர்த்தாமலேயே நாம் மின்சார உற்பத்தியை பெருக்கிக் கொண்டோம். அடுத்த ஆண்டு கூட மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ஆந்திராவின் ‘பிராண்ட்’ அடிபட்டு போனது. அவர்கள் செய்த அராஜகத்தால் சில நிறுவனங்கள் நம் மாநிலத்தை விட்டே சென்று விட்டன. ஜெகன் ஆட்சியில் ஆந்திராவின் வளர்ச்சி கூட கடந்த 5 ஆண்டுகளில் தடைபட்டது.
3 மாதங்களுக்கு ஒருமுறை மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அரசு சொத்துகளை அடமானம் வைத்து கடந்த அரசு ஆட்சி புரிந்தது. மத்திய அரசு வழங்கிய நிதியை வேறு திட்டங்களுக்கு செலவழித்ததால், பல திட்டங்கள் நின்றுவிட்டன. இதிலும் பல முறைகேடுகள் நடந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.