

அமராவதி: திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த ஆட்சியில் 60 லட்சம் லிட்டர் நெய்யில் கலப்படம் செய்து 20 கோடி லட்டு பிரசாதங்களை விநியோகம் செய்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.
ஆந்திர பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது நெய்யில் கலப்படம் என்று தெரிந்தே வாங்கியதாக தீவிர குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இதன் மீது சுமார் 3 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.
இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: கலப்பட நெய் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையை நடத்தியது. அக்குழுவினர் விசாரணை நடத்தி, அதிகாரிகள், ஊழியர்கள், நிபுணர்கள் என அனைவரும் சேர்ந்தே இந்த தவறை செய்தனர். ஆதலால் அவர்கள் மீது ஆந்திர அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கலாம் என எனக்கு பரிந்துரை செய்தது.
இதனை விசாரிக்கவே ஒரு நபர் விசாரணை கமிஷன் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியினர் லட்டு விவகாரத்தில் மட்டுமல்லாது பல விஷயங்களில் தவறிழைத்துள்ளனர். 2019- 24ம் ஆண்டு இடையே மட்டும் முந்தைய அரசு 59.71 லட்சம் லிட்டர் கலப்பட நெய்யை வாங்கி உபயோகித்துள்ளது. இதில் ரூ.231.51 கோடி ஊழல் நடந்துள்ளது.
லட்டு தயாரித்த நெய்யில் விலங்குகளின் கொழுப்பு, மீன் கொழுப்பு ஆகியவை கலந்திருப்பதாக நானாக கூறவில்லை. என்டிடிபி கொடுத்த அறிக்கையை ஆதாரமாக கொண்டு அந்த விஷயத்தை வெளியில் கூறினேன். கடவுள்தான் என்னை அப்படி சொல்ல வைத்துள்ளார். கொல்கத்தாவின் போலேபாபா டயரிதான் அனைத்து தவறுகளையும் செய்தது.
திண்டுக்கல் ஏஆர் டயரி ஃபுட்ஸ், திருப்பதி ஸ்ரீவைஷ்ணவி டயரி, நெல்லூர் மால் கங்கா மில்க் டயரி ஆகியவற்றின் பெயர்களில் நெய் விநியோகம் செய்யப்பட்டது. இதில் லஞ்சம் வாங்கிய முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டியின் உதவியாளர் சின்னப்பா கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வளவு நடக்கும்போது அப்போதைய தேவஸ்தான அறங்காவலர், நிர்வாக அதிகாரிக்கு தெரியாமல் நடக்குமா? இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.
துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியதாவது: கலப்பட நெய்யில் எந்த ரசாயனத்தை கலந்தார்களோ அது பெருமாளுக்கே வெளிச்சம். நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருந்தது என்பது என்டிடிபி கொடுத்த அறிக்கையில் இருந்தது. அது நெய்யே இல்லை என சிபிஐ அறிக்கை கொடுத்துள்ளது.
அப்போதைய அறங்காவலர் குழு மீது குற்றம் சுமத்தினால் முன்னாள் முதல்வர் ஜெகன் ஏன் மல்லு கட்டுகிறார் ? அப்படியெனில் அதில் அவருக்கும் பங்கு இருக்கிறது என்பது உண்மை தானே ? கலப்பட நெய் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இவ்வாறு பவன் கல்யாண் பேசினார்.