புதுடெல்லி: நாட்டின் பொருளாதாரத்தை தாக்கக்கூடிய 'புயல்' நெருங்கிக்கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ள ராகுல் காந்தி, உரிய நடவடிக்கை எடுத்து நாட்டை பாதுகாப்பதற்குப் பதில் பிரதமர் மோடி வேறு ஏதோ ஒன்றைச் செய்துகொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே நான் இதைச் சொல்லி வருகிறேன். பிரதமர் மோடி நாட்டின் பொருளாதார கட்டமைப்பையே மாற்றிவிட்டார். ஒரு பொருளாதாரப் புயல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அவர்களுடைய அதானி - அம்பானி சார்ந்த பொருளாதாரக் கட்டமைப்பு இனி நீண்ட காலம் நீடிக்காது. அது நிச்சயம் வீழ்ச்சியடையும். இதில், துரதிருஷ்டவசமான விஷயம் என்னவென்றால், இதனால் சாமானிய மக்கள்தான் பாதிக்கப்படப் போகிறார்கள். இந்த பொருளாதார அதிர்ச்சி அதானி, அம்பானி, மோடியை பாதிக்காது. மாறாக ஏழை எளிய மக்களைத் தான் மிக ஆழமாக பாதிக்கும். இது முன்னெப்போதும் இல்லாத வகையில் இருக்கும். கடினமான காலங்கள் வர இருக்கின்றன.
ஆனால், நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக பிரதமர் மோடி மக்களை வெளிநாட்டுப் பயணங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறார். ஆனால், அவரே தற்போது ஒரு உலகச் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். மின்சார வாகனங்களைப் பயன்படுத்துமாறு பிரதமர் மோடி கூறுகிறார். மின்சார வாகனங்கள் ஒரு பிரச்சினையே அல்ல. உண்மையான பிரச்சினை பணவீக்கமும் வேலையின்மையும்தான். மிக விரைவில் உரங்களுக்குப் பற்றாக்குறை ஏற்படப் போகிறது.
பிரதமர் மோடி எந்த உலகில் வாழந்து கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை. தொழிலாளர் வர்க்கம், விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள் மற்றும் சிறு தொழில்முனைவோரை பிரதமர் மோடி தற்போது பாதுகாக்க வேண்டும். ஒரு பெரும் புயல் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று நாங்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். ஆனால், அவரோ அனைத்தையும் கேலியாகவே எடுத்துக்கொள்கிறார். நடவடிக்கை எடுத்து நாட்டை பாதுகாப்பதற்குப் பதிலாக, அவர் வேறு ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.