

புதுடெல்லி: மாணவர்கள் போராட்ட விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நிருபர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மாணவர்கள் போராட்ட விவகாரம் தொடர்பாக அவையில் விவாதம் நடத்த தயாராக உள்ளோம். இந்த விவாதத்தின் இறுதியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிப்பார். ஆனால் எதிர்க்கட்சிகள் அமைச்சரின் பேச்சுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது. அமைதியாக அமர்ந்திருந்து அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
4 மசோதாக்கள் அறிமுகம்
மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. எதிர்க்கட்சிகளின் அமளியால் மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது கூச்சல், குழப்பம் நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகலில் அவை கூடியபோது எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு நடுவே, தீர்ப்பாயச் சீர்திருத்த மசோதா 2026, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026, கேரள மாநிலப் பெயர் மாற்ற மசோதா 2026 மற்றும் தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழக திருத்த மசோதா 2026 ஆகிய 4 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் தீர்ப்பாயச் சீர்திருத்த மசோதா 2026 விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகு எதிர்க்கட்சிகளின் அமளி அதிகமானதால் நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.