“அடுத்த 30 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது” - அமித் ஷா

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

புதுடெல்லி: “தனது எதிர்மறை அரசியல் காரணமாகவே காங்கிரஸ் கட்சியால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது,” என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லி புறநகர்ப் பகுதியில் ரூ.8,941 கோடி மதிப்பில் டெல்லி குடிநீர் வாரியத்தின் 33 திட்டங்களை அமித் ஷா தொடங்கிவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஜனநாயக முறைப்படி மக்கள் அளித்த தீர்ப்பை சவால் செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டை முன்வைக்கின்றன.

மக்கள் வழங்கிய தீர்ப்பை எதிர்க்க, நீங்கள் அரசியல் தந்திரங்களையோ, கும்பல் ஆட்சி போன்ற செயல்பாடுகளையோ பயன்படுத்த முடியாது. தேர்தலில் வெற்றிபெற விரும்பினால் மக்களிடம் சென்று அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளுங்கள். போராட்டங்களாலும் ஆர்ப்பாட்டங்களாலும் எந்தப் பயனும் கிடைக்காது.

தேர்தல் மூலம் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மக்கள் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்துங்கள். இல்லையென்றால், அந்த இடங்களிலும் உங்கள் செல்வாக்கு முற்றிலுமாக அழிந்துவிடும்.

டெல்லியில் ஒரு புதிய விளையாட்டு தொடங்கி இருக்கிறது. பாஜக அரசுகள் தேர்ந்தெடுக்கப்படும்போதெல்லாம், அவர்கள் ‘வாக்குத் திருட்டு’ என்று சாக்கு சொல்கிறார்கள். பாஜக மக்கள் வாக்குகளால் ஆட்சிக்கு வரவில்லை என்றும், மாறாக வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வருகிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். உண்மையில் இத்தகைய ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுக்களின் மூலம் ஊடுருவல்காரர்களின் வாக்குகளைப் பாதுகாக்கவே அவர்கள் முயல்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் பல பத்தாண்டுகளாக தோல்வியையே சந்தித்து வருகிறது. 2014-ல் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சியை நிராகரித்துவிட்டனர்.

கேரளா, இமாச்சலப் பிரதேசம், தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றன. அந்த வெற்றிகளின்போதும் இதே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், இதே தேர்தல் ஆணையமும்தான் செயல்பாட்டில் இருந்தன.

நீங்கள் தோற்கும்போதெல்லாம் தேர்தல் ஆணையத்தை குறை கூறுகிறீர்கள். நீதிமன்றங்கள் உங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தால் அவை நல்லவை; இல்லையென்றால் அவை கெட்டவை.

பாஜக 30 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என்று நான் கூறினால், உடனே அவர்கள் வாக்குகள் திருடப்பட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அமித் ஷா இங்கேயே பிறந்தவர், இங்கேயே வசிப்பவர், இங்கேயே உயிரிழப்பார். ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய தேவை எனக்கு இல்லை. உங்கள் எதிர்மறை அரசியல் காரணமாகவே நீங்கள் அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது.” என தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
நடிகர் டைகர் ஷெராப் துப்பாக்கிச்சூடு வழக்கில் மேலும் ஒருவர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in