

புதுடெல்லி: நேரு முதல் இப்போதைய காங்கிரஸ் தலைமை வரை வந்தே மாதரம் பாடலை எதிர்க்கின்றனர் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டி உள்ளார். வங்கமொழி கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.
இதையொட்டி மக்களவையில் நேற்று முன்தினம் 10 மணி நேரம் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் வந்தே மாதரம் பாடல் குறித்து நேற்று சிறப்பு விவாதம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விவாதத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: தேசிய பாடலான வந்தே மாதரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதற்காக சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என்று மக்களவையில் சிலர் (பிரியங்கா காந்தி) கேள்வி எழுப்பினர். மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்காகவே விவாதம் நடைபெறுகிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். மே.வங்க தேர்தலுக்கும், சிறப்பு விவாதத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
வந்தே மாதரம், இந்தியாவின் தேசியப் பாடல் ஆகும். இந்த பாடல் குறித்து இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வது அவசியம் ஆகும். 150 ஆண்டுகளை நிறைவு செய்த தேசிய பாடலுக்கு மரியாதை செலுத்தவே அவையில் சிறப்பு விவாதம் நடத்தப்படுகிறது.
மக்களவையில் விவாதம் தொடங்கியபோது ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அவையிலேயே இல்லை. சுதந்திர போராட்ட காலத்தில் வந்தே மாதரம், இந்திய மக்களுக்கு உத்வேகம் அளித்தது. இந்த பாடல் இந்தியாவின் ஆன்மாவை பிரதிபலிக்கிறது என்று மகாத்மா காந்தி புகழாரம் சூட்டினார்.
ஆனால் நேரு முதல் இப்போதைய காங்கிரஸ் தலைவர்கள் வரை வந்தே மாதரம் பாடலை எதிர்த்து வருகின்றனர். இந்த உணர்வு அவர்களின் ரத்தத்தில் கலந்திருக்கிறது. வந்தே மாதரம் பாடலை பாடாத காங்கிரஸ் எம்பிக்கள் பலர் உள்ளனர். தாயும் தாய்நாடும் கடவுளைவிட மேலானவர்கள் என்று பகவான் ராமர் கூறினார். தாய்நாட்டைவிட உயர்வானது எதுவுமே கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.
கார்கே கருத்து: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: கடந்த 1896-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வந்தே மாதரம் பாடலை கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பாடினார். இந்த பாடலை கடந்த 60 ஆண்டுகளாக நான் பாடி வருகிறேன்.
பாடலை இயற்றிய வங்கமொழி கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜிக்கும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் தலைவணங்கி வணக்கம் செலுத்துகிறேன்.
தேசத்தந்தை காந்தியடிகள், ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியபோது லட்சக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்கள், வந்தே மாதரம் பாடலை பாடியபடி சிறை சென்றனர். அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஆங்கிலேயர்களுக்கு சேவையாற்றி கொண்டிருந்தீர்கள்.
தேசிய நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலின் முதல் இரு பாராக்களை பாட காந்தியடிகள், நேரு, மவுலானா ஆசாத், நேதாஜி, சர்தார் படேல் உள்ளிட்டோர் அடங்கிய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது, பல்வேறு தலைவர்கள் ஒருமித்து எடுத்த முடிவு ஆகும். ஆனால் நேருவை மட்டும் பாஜக தலைவர்கள் குறை கூறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.