

வாஷிங்டன்: ஐரோப்பிய நாடான டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா புதிய வியூகத்தை வகுத்துள்ளது.
ஆர்டிக் பகுதியில் உலகின் மிகப்பெரிய கிரீன்லாந்து தீவு அமைந்திருக்கிறது. பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளின் பரப்பளவுக்கு இணையாக கிரீன்லாந்து பரந்து விரிந்துள்ளது.
கடந்த 1814-ம் ஆண்டு முதல் இந்த தீவு ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆர்டிக் பகுதியில் மிக நீண்டகாலமாக ரஷ்யா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அண்மைகாலமாக சீனாவும் ஆர்டிக்கில் கால் பதித்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தீவிர முயற்சி செய்து வருகிறது. இந்த சூழலில் பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து தீவு அமெரிக்காவுடன் இணைக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து, ஸ்பெயின், டென்மார்க் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து வெளியிட்ட அறிக்கையில், “கிரீன்லாந்தில் வசிக்கும் மக்களுக்கே அந்த தீவு சொந்தம். இதை வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. கிரீன்லாந்தின் எதிர்காலத்தை டென்மார்க், கிரீன்லாந்து மட்டுமே முடிவு செய்ய முடியும்” என்று தெரிவிக்கப்பட்டது.
டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் கூறும்போது, “கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற முயன்றால் நேட்டோ கூட்டமைப்பு உடைந்து சிதறும். அமெரிக்காவின் கோரிக்கையை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.
தன்னாட்சி அதிகாரத்துடன் தனி நாடாளுமன்றத்துடன் கிரீன்லாந்து செயல்பட்டு வருகிறது. பிரதமராக ஜென்ஸ் பிரடெரிக் நெல்சன் பதவி வகிக்கிறார். அவர் கூறும்போது, “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல. எங்கள் தீவை அமெரிக்கா சொந்தம் கொண்டாட முடியாது” என்று தெரிவித்தார்.
இந்த சூழலில் கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா புதிய வியூகத்தை வகுத்திருக்கிறது. இதுதொடர்பாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்க முடிவு செய்திருக்கிறோம். தற்போது கிரீன்லாந்து தீவில் சுமார் 57,000 பேர் வசிக்கின்றனர். அவர்களுக்கு தலா ஒரு லட்சம் டாலர் (ரூ.90 லட்சம்) வழங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் கிரீன்லாந்து மக்கள் அமெரிக்காவுக்கு ஆதரவு அளிப்பார்கள். எந்த வகையிலாவது கிரீன்லாந்து தீவை விலை கொடுத்து வாங்குவோம். இல்லையென்றால் ராஜ்ஜியரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்போம்.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அடுத்த வாரம் டென்மார்க் தலைவர்களை சந்தித்துப் பேசுவார். கடந்த 1917-ம் ஆண்டில் டென்மார்க்கிடம் இருந்து வெர்ஜின் தீவுகளை விலைக்கு வாங்கினோம். அதேபோன்று இப்போது கிரீன்லாந்தை வாங்குவோம். தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம். இவ்வாறு அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
சுட்டுத் தள்ளுவோம்: கடந்த 1952-ம் ஆண்டில் டென்மார்க் ராணுவத்தில் முக்கிய உத்தரவு அமல் செய்யப்பட்டது. இதன்படி டென்மார்க் எல்லைக்குள் அந்நியர்கள் ஊடுருவ முயற்சி செய்தால் ராணுவ வீரர்கள், "முதலில் அந்நியர்களை சுட்டுத் தள்ள வேண்டும். அதன்பிறகே கேள்விகளை எழுப்ப வேண்டும்’’. தற்போதைய சூழலில் இந்த நடைமுறையை டென்மார்க் ராணுவ வீரர்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று ராணுவ தலைமை உத்தரவிட்டு உள்ளது.
இதன்மூலம் அமெரிக்காவுக்கு டென்மார்க் அரசு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கிரீன்லாந்தின் தலைநகர் நூக் மற்றும் ஸ்டேசன் நோர்ட், டேன்போர்க், மெஸ்டர்ஸ்விக், க்ரோனெடல், கங்கர்லுசுவாக் ஆகிய இடங்களில் டென்மார்க் ராணுவ தளங்கள் அமைந்துள்ளன. இந்த ராணுவ தளங்களுக்கு கூடுதல் வீரர்கள், ஆயுதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
தீவின் முக்கியத்துவம்: இரண்டாம் உலகப்போரின்போது டென்மார்க் நாட்டையும் கிரீன்லாந்து தீவையும் ஜெர்மனியின் நாஜி படை ஆக்கிரமித்தது. அப்போது அமெரிக்க ராணுவ வீரர்கள், நாஜி படையை தோற்கடித்து டென்மார்க்கையும் கிரீன்லாந்து தீவையும் மீட்டனர். இதன்பிறகு கிரீன்லாந்தின் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்க ராணுவ தளங்கள் செயல்பட்டன. பனிப்போர் காலத்துக்கு பிறகு அந்த ராணுவ தளங்கள் படிப்படியாக மூடப்பட்டன.
தற்போது கிரீன்லாந்தின் பிட்டஃபிக் என்ற இடத்தில் மட்டும் அமெரிக்க விண்வெளி கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது. அங்கிருந்து செயற்கைக் கோள் கண்காணிப்பு, ஏவுகணை அச்சுறுத்தல்களை கண்காணிக்கும் பணிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. இதற்காக சுமார் 150 அமெரிக்க வீரர்கள் கிரீன்லாந்து தீவில் தங்கி உள்ளனர்.
இரண்டாம் உலகப்போரின்போதே கிரீன்லாந்து தீவை அமெரிக்கா விலைக்கு வாங்க முயற்சி செய்தது. அதற்கு டென்மார்க் சம்மதம் தெரிவிக்க வில்லை. தற்போது அதிபர் ட்ரம்ப் ஆட்சிக் காலத்தில் கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக பறிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.