

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் கடந்த 2006-ல் ஏற்பட்ட வன்முறையால் கலைக்கப்பட்ட ஜாமியா மாணவர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தக் கோரி, அக்டோபர் 12 முதல் மாணவர்கள் போராடி வருகின்றனர்.
போராட்டத்தின்போது நேற்று மாணவர்கள் அமைத்திருந்த கூடாரங்களைப் பாதுகாப்பு ஊழியர்கள் அகற்ற முயன்றபோது வளாகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுப் பதற்றம் நிலவியது.
போராட்ட களத்தில் “காஷ்மீருக்கு விடுதலை’’, “ஷர்ஜீல் இமாமை விடுதலை செய்” மற்றும்
“ஆர்.எஸ்.எஸ் வெளியேறு” போன்ற சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளும் முழக்கங்களும் இடம்பெற்றது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
போராட்டத்தில் வன்முறை சூழல் நிலவியதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, மறு உத்தரவு வரும் வரை அனைத்துப் படிப்புகளும் இணையவழியில் மட்டுமே நடைபெறும் எனப் பதிவாளர் பேராசிரியர் முகமது மஹ்தாப் ஆலம் ரிஸ்வி அறிவித்துள்ளார்.