

யஷ்வந்த் வர்மா
புது டெல்லி: முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள ஓர் அறையிலிருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது. இந்த அறிக்கை மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. டெல்லியில் இவர் வசித்து வந்த அரசு பங்களாவில் 2025-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும்போது வீட்டின் ஓர் அறையில் பாதி எரிந்த நிலையில் ரூ.500 நோட்டுகள் மூட்டை மூட்டையாக கண்டெடுக்கப்பட்டது.
கடும் கண்டனத்துக்கு ஆளான வர்மா அப்பணம் தனக்கு சொந்தமானது அல்ல என மறுத்தார். நீதிபதி வர்மாவை பதவியில் இருந்து நீக்குவதற்கான பதவி நீக்க நடைமுறை நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த ஆகஸ்ட் மாதம் அமைத்தார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து நீதிபதி வர்மா விலகினார்.
நாடாளுமன்றக் குழு வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த விவகாரம் குறித்த ஆவணங்கள், மின்னணுப் பதிவுகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான விசாரணைக்குப் பிறகு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கவும், தனது தரப்பு வாதங்களை முன்வைக்கவும் நீதிபதி வர்மாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இந்த அறிக்கையில், தீ விபத்து நிகழ்ந்தது, பணம் கண்டெடுக்கப்பட்டது, அரசு ஒதுக்கிய இல்லத்தில் சேமிப்பறை அமைந்திருந்த இடம், தீ விபத்துக்குப் பிந்தைய நடவடிக்கைகள் எனக் கூறப்படுபவை மற்றும் நீதிபதி அளித்த விளக்கம் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி, 30, துக்ளக் கிரசென்ட் என்ற முகவரியில் உள்ள யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள அறையில் இருந்து கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அவை இருந்த இடம், ஆதாரம் அல்லது உரிமை குறித்து நீதிபதி திருப்திகரமான விளக்கத்தை அளிக்கத் தவறிவிட்டார்.
கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில் முக்கிய ஆதாரங்கள் பாதுகாக்கப்படவில்லை. பணம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து முறையாக 'சீல்' (seal) வைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுவதற்கு முன்பே அந்த அறைக்குள் தலையீடு செய்யப்பட்டது. இது ஆதாரங்களைப் பாதுகாப்பதில் பாதிப்பை ஏற்படுத்தியது.
தொடக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த நீதிபதி வர்மா, பின்னர் அப்பணம் திட்டமிட்டு அங்கு வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது மற்றவர்களின் சதித் திட்டமாக இருக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இருப்பினும், அவற்றை உறுதிப்படுத்தும் வகையில் எந்த ஆதாரமும் இல்லை.
அத்துடன், பணம் வேண்டுமென்றே வைக்கப்பட்டதாகவோ அல்லது ஆதாரங்கள் சிதைக்கப்பட்டதாகவோ கூறி எந்தவொரு முதல் தகவல் அறிக்கையோ அல்லது முறையான புகாரோ பதிவு செய்யப்படவில்லை.
வர்மாவின் விளக்கங்கள் மழுப்பலாகவும், முழுமையற்றதாகவும், தவறான வழிகாட்டுதல் கொண்டதாகவும் இருந்தன. ஓர் அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதியிடமிருந்து எதிர்பார்க்கப்படும் வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் நிறுவனப் பொறுப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் அவரிடம் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.