

பெங்களூரு: ‘கர்நாடகாவில் உள்ள 140 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் என்னுடைய எம்எல்ஏக்கள். கோஷ்டியை உருவாக்குவது என் ரத்தத்தில் இல்லை. நானும் முதல்வரும் உயர் தலைமையின் கட்டளைக்குக் கட்டுப்படுவோம்’ என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
கர்நாடகாவில் முதல்வர் மாற்றத்துக்கான மோதல் தீவிரமடைந்துள்ளது. டி.கே. சிவகுமார் ஆதரவு எம்எல்ஏக்கள் காங்கிரஸ் தலைமைக்கு அழுத்தம் கொடுக்க டெல்லி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசாங்கம் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தின் முதல் பாதியை நவம்பர் 20 ஆம் தேதி நிறைவு செய்ததால், துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனையடுத்து நேற்றும், இன்றும் சிவகுமாருக்கு ஆதரவான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து, சிவகுமாரை முதல்வராக்க வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியானது. அவர்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க முடிவு செய்துள்ளனர்.
டெல்லிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று சிவகுமார் தெரிவித்திருந்தார். இது குறித்துப் பேசிய டி.கே. சிவகுமாரின் சகோதரரும், முன்னாள் எம்.பி.யுமான டி.கே. சுரேஷ், “சித்தராமையா ஒரு வாக்குறுதியை அளித்துள்ளார். அவர் தனது வார்த்தையைக் காப்பாற்றுவார்” என்று தெரிவித்திருந்தார்.
முதல்வர் மாற்றம் குறித்த வதந்திகளை நிராகரித்த சித்தராமையா, “நான் கர்நாடக முதல்வராகத் தொடர்வேன். மார்ச் 2026 இல் திட்டமிடப்பட்டுள்ள மாநில பட்ஜெட்டை நான் தாக்கல் செய்வேன்” என்றார்.
கர்நாடக முதல்வர் மாற்றம் குறித்து தொடர்ந்து சலசலப்புகள் நிலவினாலும், காங்கிரஸ் உயர்மட்ட தலைமை முதல்வர் மாற்றம் குறித்து எந்த விவாதமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில், கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் குறித்த வதந்திகள் பற்றி மவுனம் கலைத்த துணை முதல்வர் டி.கே. சிவகுமார், “கோஷ்டிவாதம் எனது ரத்தத்தில் இல்லை. சித்தராமையா முதல்வராக தனது பதவிக் காலத்தை முடிப்பார். வரவிருக்கும் அமைச்சரவை மாற்றத்திற்கு முன்னதாக காங்கிரஸ் தலைமையைச் சந்திக்க எம்.எல்.ஏ.க்களில் ஒரு பகுதியினர் டெல்லிக்குச் சென்றனர்.
கர்நாடகாவில் உள்ள 140 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களும் என்னுடைய எம்.எல்.ஏக்கள். கோஷ்டியை உருவாக்குவது என் ரத்தத்தில் இல்லை. நானும் முதல்வரும் உயர் தலைமையின் கட்டளைக்குக் கட்டுப்படுவோம் என்று பலமுறை கூறியுள்ளோம்" என்று சிவகுமார் கூறினார். கோஷ்டி மோதல் இல்லை என்று கூறினாலும் 140 எம்எல்ஏ.க்கள் என்னவர்கள் என்று சூசகமாக கூறியுள்ளதாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.