

பெங்களூரு: “நானும் முதல்வர் சித்தராமையாவும் இணைந்து பணியாற்றி வருகிறோம். சித்தராமையா முதல்வராக தொடர்ந்தால் என்ன தவறு” என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கேள்வி எழுப்பினார்.
2028 ஆம் ஆண்டில் சித்தராமையா தனது ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடித்தவுடன் டி.கே.சிவகுமார் மீண்டும் முதல்வராவார் என்று கர்நாடக அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியது சலசலப்பை உருவாக்கியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த டி.கே.சிவகுமார், “தற்போது உள்ள நிலையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமை ஒற்றுமையாக இருக்கிறோம். சித்தராமையா முதல்வராக தொடர்ந்தால் என்ன தவறு.” என்றார்
நவம்பர் 15-ம் தேதி சித்தராமையா புது டெல்லி செல்வது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த சிவகுமார், “ராஜ்யசபா எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் டெல்லி செல்கிறார். பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள நீதிமன்றங்களில் கபில் சிபல், அவரின் வழக்குகளை கையாள்கிறார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அமைச்சரவை மாற்றம் என்பது முதல்வரின் பொறுப்பு. மாநில காங்கிரஸ் தலைவராக நான் சித்தராமையாவுடன் இதுவரை அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் மறுசீரமைப்புத் திட்டங்கள் குறித்து விவாதிக்கவில்லை.” என்று கூறினார்.
பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்புகள் பற்றி பேசிய சிவகுமார், “பிஹாரில் காங்கிரஸ்-ஆர்ஜேடி மகா கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று நம்புகிறேன். பிஹார் முடிவுகள் கர்நாடக அரசியலை பாதிக்காது.” என்றார்