ரோஹித் பவார்
அஜித் பவார் உயிரிழப்பு விவகாரம்: விமானப் போக்குவரத்து அமைச்சரை பதவி நீக்கம் செய்ய கோரி பிரதமருக்கு கடிதம்
புது டெல்லி: விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்த விவகாரத்தில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை பதவி நீக்கம் செய்யக் கோரியும், அந்த விமான விபத்து குறித்து சுயாதீன விசாரணை நடத்தக் கோரியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) எம்எல்ஏ ரோஹித் பவார் கடிதம் எழுதினார்.
என்சிபி (எஸ்பி) கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலேவின் மருமகனான எம்எல்ஏ ரோஹித் பவார், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘கடந்த மாதம் பாராமதியில் நடந்த விமான விபத்தில் அஜித் பவாரின் மரணம் அடைந்தது, விமானப் போக்குவரத்து நிறுவனமான விஎஸ்ஆர் சம்பந்தப்பட்ட சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். எனவே, இதில் விஎஸ்ஆர் நிறுவனம் மற்றும் ராம்மோகன் நாயுடுவின் கட்சியான தெலுங்கு தேசத்தின் தொடர்புகள் குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்த தொடர்புகள் குறித்து முதன்மையான சர்வதேச விசாரணை நிறுவனங்களுடன் இணைந்து, ஒரு சுயாதீனமான மற்றும் திறமையான அதிகாரியால் விசாரிக்கப்பட வேண்டும்.
நீங்கள் எப்போதும் அஜித் பவாருக்கும், நாட்டுக்கு அவர் அளித்த பங்களிப்புக்கும் மரியாதை காட்டுகிறீர்கள். இந்த சூழலில், ராம்மோகன் நாயுடுவை தனது பதவியை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். தொழில் மற்றும் அரசியலில் செல்வாக்கு மிக்க ஒரு குழு விஎஸ்ஆர் நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளது தெரியவந்துள்ளது. இதனால்தான் இந்த விசாரணை வெளிப்படையாக நடக்காது என்று நாங்கள் நினைக்கிறோம்.
விஎஸ்ஆர் நிறுவனம் தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எந்த வகையிலும் சமரசம் செய்ததா என்று ஆராய்ந்து, விசாரணையில் எந்த செல்வாக்கும் அல்லது தலையீடும் இல்லை என்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று ரோஹித் பவார் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தின் நகல், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அனுப்பப்பட்டது.
ஜனவரி 28-ஆம் தேதி பாராமதி விமான நிலையத்தில், டேபிள்டாப் ஓடுபாதையின் விளிம்பிலிருந்து 200 மீட்டர் தொலைவில் அஜித் பவார் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானதில், அவர் மற்றும் நான்கு பேர் உயிரிழந்தனர்.
