"விமான நிலையங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன" - மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

"விமான நிலையங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன" - மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்
Updated on
2 min read

புதுடெல்லி: விமான நிலையங்கள் வேகமாக இயல்புநிலைக்கு திரும்பி வருவதாகவும், விமான நிலையங்களில் கூட்டநெரிசல் மற்றும் சிக்கல்கள் எதுவும் இல்லை என்றும் மக்களவையில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

விமானிகள் பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களால் இண்​டிகோ விமான நிறுவன சேவை கடந்த ஒரு வாரமாக கடுமை​யாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 ஆயிரத்​துக்கு மேற்​பட்ட விமான சேவை​கள் ரத்து செய்​யப்​பட்​டன. இதனால் பயணி​கள் கடும் சிரமத்​துக்கு ஆளாகினர். பாதிக்கப்பட்ட விமான செயல்பாடுகளை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

இது தொடர்பாக இன்று மக்களவையில் பேசிய ராம் மோகன் நாயுடு, “இண்டிகோவின் செயல்பாட்டு தோல்விகளால் ஏற்பட்ட சிக்கல்கள் இப்போது விரைவாக இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது என்பதை நான் அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். டிசம்பர் 5 அன்று 706 ஆகக் குறைந்திருந்த இண்டிகோவின் தினசரி விமான சேவைகளின் எண்ணிக்கை, நேற்று 1,800 ஆக மீண்டது. இன்று மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் மற்ற அனைத்து விமான நிறுவனங்களும் தொடர்ந்து சீராக இயங்குகின்றன. விமான நிலையங்கள் கூட்ட நெரிசல் மற்றும் சிக்கல்கள் இல்லாமல் இயல்பான நிலையில் செயல்படுகின்றன. பணத்தைத் திரும்பப் பெறுதல், பொருட்களை கண்டறிதல் போன்ற பயணிகளுக்கான சேவைகள் அமைச்சகத்தின் மேற்பார்வையில் உள்ளன.

இந்த சிக்கல்களுக்கு பொறுப்பேற்க இண்டிகோவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையை, பயணிகளின் நலனை மையமாகக் கொண்டதாக மாற்ற நீண்டகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், இண்டிகோவிடம் பொறுப்புகூறல் உறுதி செய்யப்படும். இண்டிகோவின் உயர் தலைமைக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

விசாரணையின் முடிவைப் பொறுத்து, விமான விதிகள் மற்றும் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திட்டமிடல் தோல்விகள் மற்றும் சட்டப்பூர்வ விதிகளுக்கு இணங்காததன் மூலம் பயணிகளுக்கு இதுபோன்ற சிரமங்களை ஏற்படுத்த இனி எந்த விமான நிறுவனமும் அனுமதிக்கப்படாது.

சிவில் விமானப் போக்குவரத்தில் பாதுகாப்பு என்பது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல, அதில் சமரசம் செய்ய முடியாது. இந்தியா சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பில் உறுப்பினராக உள்ளது. மேலும், மிக உயர்ந்த உலகளாவிய பாதுகாப்புத் தரங்களை கடைபிடிக்கிறது. விமானிகளின் சோர்வைத் தடுக்கவே விமான பணி நேர வரம்பு FDTL செயல்படுத்தப்படுகிறது. இந்த சீர்திருத்தங்கள் அடிப்படையில் பயணிகள் பாதுகாப்பிற்காகவே செயல்படுத்தப்படுகின்றன.

அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்து, படிப்படியாக FDTL விதிமுறைகளை செயல்படுத்தும் திட்டத்தை விமான போக்குவரத்து ஆணையம் ஏற்றுக்கொண்டது. ஜூலை 2025ல் முதல் கட்டம் 1, நவம்பர் 1 முதல் கட்டம் 2 செயல்படுத்தப்பட்டது. இண்டிகோ இந்த விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்தது. ஆனாலும் அந்நிறுவனத்தின் தவறுகளால் ஏற்பட்ட இடையூறுகள் பெரிய அளவிலான விமான சேவை ரத்துகளுக்கு வழிவகுத்தன. இது ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது” என்று கூறினார்.

"விமான நிலையங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன" - மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்
புதுச்சேரி: விஜய் வாகனம் வந்து செல்ல தனி பாதை - ஒரு மணி நேரத்துக்கு பிறகே மேடை ஏறிய விஜய்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in