“அயோத்தியை போல மதுராவிலும் பிரம்மாண்ட கோயில் வளாகம் அமைக்கப்படும்” - யோகி ஆதித்யநாத்

“அயோத்தியை போல மதுராவிலும் பிரம்மாண்ட கோயில் வளாகம் அமைக்கப்படும்” -  யோகி ஆதித்யநாத்
Updated on
1 min read

மதுரா: அயோத்தியைப் போலவே மதுராவிலும் பிரம்மாண்ட கோயில் வளாகம் அமைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு மேற்கொண்டார். பின்னர் பக்தர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “உலகின் மிகப் பெரிய கோயில் அயோத்தியில் கட்டப்பட்டுள்ளது. அயோத்தி மற்றும் காசியில் உள்ளதைப் போன்று மதுரா மற்றும் பிருந்தாவனிலும் பிரம்மாண்டமான வளாகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் முயற்சி.

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணர் அருளிய பிரகடனம் இன்றும் பொருந்துகிறது. தீயவர்களை அழித்து நல்லவர்களை பாதுகாப்பேன் என்று அவர் பிரகடனம் செய்தார். நற்குணத்தின் சக்திகள் எங்கெல்லாம உள்ளனவோ அவை எல்லா சூழ்நிலைகளிலும் பாதுகாக்கப்படும்.

அதேநேரத்தில், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும் நோக்கில் தலைதூக்கும் தேசவிரோத சக்திகளின் கதி என்ன ஆகும் என்பதை பகவான் கிருஷ்ணர் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்துவிட்டார்.

இந்தியா மீது பல படையெடுப்புகள் நிகழ்ந்தன. பலர் தங்கள் மதங்களை இந்தியா மீது திணிக்க முயன்றனர். எனினும், யாராலும் சனாதன தர்மத்தை அழிக்க முடியவில்லை. பகவான் கிருஷ்ணரின் பாரம்பரியம், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மதுராவில் தொடரும் சட்ட சிக்கல்:

மதுரா கோயிலை ஒட்டி ஷாஹி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ளது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக இந்து தரப்பினர் கூறி வருகின்றனர். மசூதி உள்ள இடம் கோயிலுக்குச் சொந்தமானது என கூறி பலர் உரிமையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்த கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

“அயோத்தியை போல மதுராவிலும் பிரம்மாண்ட கோயில் வளாகம் அமைக்கப்படும்” -  யோகி ஆதித்யநாத்
சுதந்திர பரத்வாஜை கைது செய்வதாக டெல்லி போலீஸ் உறுதி: சிஜேபி தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in