

விவேக் பகத்
புதுடெல்லி: பெண் பத்திரிகையாளர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய புகாரில் சிக்கிய டெல்லி காவல் உதவி ஆணையருக்கு (ஏசிபி) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியின் ஜந்தர் மந்தரில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக அக்டோபர் 3 முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் செய்தியை சேகரிக்கச் சென்ற 3 பெண் பத்திரிகையாளர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது.
இதில் குறிப்பாக டெல்லியின் காவல்துறை ஏசிபி விவேக் பகத், மீது புகார் எழுந்தது. இவர் மீது புகார் அளித்த பெண் பத்திரிகையாளர்கள் வழக்கில் குற்றப்பிரிவு விசாரணையும் தொடங்கி உள்ளது.
இந்நிலையில், ஏசிபி விவேக் பகத்திற்கு டெல்லி அரசால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பகத்துடன் சேர்த்து 12 ’தேர்வு நிலை’ அதிகாரிகளுக்கு துணை காவல் ஆணையர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை டெல்லி துணைநிலை ஆளுநர் அக்டோபர் 5, 2026 அன்று பிறப்பித்தார். அனைவரும் புதிய பதவியை உடனடியாக ஏற்கும்படியும் அவர் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
தற்போது புதுடெல்லி கன்னாட் பிளேஸ் உட்கோட்டத்தின் ஏசிபியாகப் பகத் பணியாற்றி வருகிறார். கடந்த, 2024 முதல் ஏசிபி பகத் அப்பதவியில் உள்ளார்.
நகரின் மிக முக்கியமான போராட்டக் களமான ஜந்தர் மந்தர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் நேரடிப் பொறுப்பு அவரிடம் உள்ளது.
பெண் பத்திர்கையாளர்கள் அளித்த புகாரில், ’போராட்டத்தின்போது அகில இந்திய மாணவர்கள் சங்கத்தின் ஒரு செயல்பாட்டாளர் தடுத்து நிறுத்தப்படுவதைப் படம்பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது, பகத் தன்னைத் தவறான முறையில் தொட்டுத் தள்ளினார். எனது பின்னாலிருந்து என்னைத் தொட்டபின் நான் அலறியதால் அவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.’ எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, வேறு இரண்டு பெண் பத்திரிகையாளர்களும் இதே போன்ற புகார்களை முன்வந்துள்ளனர். இப்புகார்களை நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்தது.
பெண் பத்திரிகையாளர்கள் புகார் விசாரணையில் புகார்தாரர்கள் மற்றும் தொடர்புடைய மற்றவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதுவரை எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த விவகாரத்தில், 'லலிதா குமாரி vs உத்தரப் பிரதேச அரசு' (2013) என்ற வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பு முக்கியமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. அந்தத் தீர்ப்பின்படி, “ஒரு தகவல் குற்றம் வெளிப்படுத்தும்போது, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 154-ன் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்வது கட்டாயமாகும்.
இதில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுப்பதற்கோ அல்லது தாமதப்படுத்துவதற்கோ காவல்துறைக்கு எவ்வித அதிகாரமும் இல்லை” எனக் கூறப்பட்டது.
இதன்படி, ஏசிபி பகத் மீது உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என பத்திரிகையாளர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிஜேபி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்வுகள் மூலம் பகத் தேசிய அளவில் கவனத்தை ஈர்ப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற கரப்பான் பூச்சி ஜனதாவின்(சிஜேபி) போராட்டத்திலும் அவர் சர்ச்சைக்கு உள்ளானார்.
அப்போது நடந்த மாணவர் ஆர்ப்பாட்டத்தின்போது ஒரு கும்பலால் தான் தாக்கப்பட்டதாக பகத் தெரிவித்தார். காயமடைந்த சக ஊழியர் ஒருவரைக் காப்பாற்ற முயன்றபோது அவர் தலைப்பகுதியிலும் பற்களிலும் காயங்களுக்கு ஆளானார்.
பின்னர் மூத்த அதிகாரிகளால் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். காயமடைந்த நிலையில் அந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து அவர் விவரிக்கும் காணொளிகள் அப்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.