

மும்பை: மகாராஷ்டிராவின் பீட் பகுதி வனத்துறை அதிகாரியாக ஸ்ரீநிவாஸ் லிங்கண்ணா லக்மாவத் (40) பணியாற்றி வந்தார்.
அவருக்கு கீழ் பணியாற்றி வரும் அலுவலர் சில முறைகேடு விவகாரங்களில் சிக்கினார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும், ஊதிய உயர்வு வழங்கவும் ஸ்ரீநிவாஸ் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும் வனத்துறை அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மரம் நடும் திட்டத்தில் 12 சதவீத கமிஷன் வழங்க வேண்டும் என்றும் ஸ்ரீநிவாஸ் கோரியுள்ளார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அலுவலர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் (ஏசிபி) ரகசியமாக புகார் அளித்தார். வனத்துறை அதிகாரி ஸ்ரீநிவாஸ் மொத்தம் ரூ.45 லட்சத்தை லஞ்சமாக கோரினார். அவ்வளவு பெரிய தொகையை திரட்டுவது கடினம் என்பதால் ஏசிபி போலீஸார் புதிய வியூகத்தை வகுத்தனர்.
பெரிய பையின் மேற்பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அடுக்கினர். அந்த பையின் கீழ் பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள போலி கரன்சி நோட்டுகளை அடுக்கி வைத்தனர். வனத்துறை அதிகாரி ஸ்ரீநிவாஸின் வீடு மகாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜி நகரில் உள்ளது. அந்த வீட்டுக்கு நேரில் வந்து ரூ.45 லட்சம் லஞ்சத்தை வழங்க வேண்டும் என்று வனத்துறை அலுவலரிடம் அவர் கூறியிருந்தார்.
இதன்படி நேற்று முன்தினம் மதியம் ஸ்ரீநிவாஸின் வீட்டுக்கு சென்ற வனத்துறை அலுவலர், ரூ.5 லட்சம் உண்மையான கரன்சி மற்றும் ரூ.40 லட்சம் போலி கரன்சி நோட்டுகள் அடங்கிய பையை அவரிடம் வழங்கினார். அப்போது வீட்டுக்குள் திடீரென நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், ஸ்ரீநிவாஸை கையும் களவுமாக கைது செய்தனர்.