

பிரியங்கா காந்தி | ஐஐடி இயக்குநர் காமகோடி |
புதுடெல்லி: ஐஐடி உயர் கல்வி நிறுவன இயக்குநர் காமகோடியை, கோமிய நிபுணர் என்று கூறியதற்கு அதிருப்தி தெரிவித்து காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேராவுக்கு நாட்டிலுள்ள 215 கல்வியாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
மக்களவையில் நேற்று முன்தினம் ‘பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா- 2026’ மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் கலந்துகொண்டு பிரியங்கா காந்தி பேசும்போது, “வினாத்தாள் கசிவு தொடர்பான பிற குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிப்பதுதான் மசோதாவின் முக்கிய நோக்கம்.
வினாத்தாள் கசிவை தடுக்க அமைக்கப்பட்டுள்ள புதிய நிபுணர்கள் குழுவில் பல உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். பிரதமர் தனது ஆலோசகர்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
புதிய நிபுணர் குழு:
இந்தப் புதிய நிபுணர்கள் குழுவில் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் (தபன் தேகா), ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவன உரிமையாளர் (நந்தன் நிலேகனி), ஒரு ‘மாட்டுக் கோமிய நிபுணர்’ (காமகோடி) ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு கல்வியைப் பற்றி என்ன தெரியும் ?” என்று கேள்வி எழுப்பினார்.
பிரியங்கா காந்தி, சென்னை ஐஐடி உயர்கல்வி நிறுவன இயக்குநர் காமகோடியைத்தான் ‘கோமிய நிபுணர்’ என்று தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் 215 கல்வியாளர்கள் பிரியங்கா காந்தியின் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்து கடிதம் ஒன்றை நேற்று எழுதியுள்ளனர்.
ஏமாற்றம் அளிக்கிறது:
அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது: சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடியை கோமிய நிபுணர் என்று தெரிவித்து நீங்கள் வெளியிட்ட கருத்து ஏமாற்றம் அளிக்கிறது.
இதற்காக எங்களது அதிருப்தியைத் தெரிவித்து இந்தக் கடிதத்தை எழுதியுள்ளோம். அது கிண்டலாகக் கூறப்பட்டதா அல்லது அரசியல் சொல்லாடலாக இருந்ததா என்பதைப் பொருட்படுத்தாமல், அத்தகைய சித்தரிப்பு ஒரு தனி நபர் மீதான விமர்சனம் என்பதை விட அதையும் தாண்டிய கவலைகளை எழுப்புகிறது.
பேராசிரியர் காமகோடி இந்தியாவின் முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றின் தலைவர் ஆவார். ஒவ்வொரு கல்வியாளரைப் போலவே, கருத்துக்களை முன்வைக்கவும், பாரம்பரிய அறிவைப் பற்றி விவாதிக்கவும், அறிவியல் உரையாடல்களில் பங்கேற்கவும் அவருக்கு உரிமை உண்டு.
ஓர் அறிஞரின் கருத்துகளின் சாராம்சத்துடன் விவாதத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக, அவரை ஒரு முத்திரையின் மூலம் நிராகரிப்பது கூடாது. இவ்வாறு பிரியங்கா காந்திக்கு கல்வியாளர்கள் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.