போராட்டங்களால் டெல்லியில் அசாதாரண நிலை: தலைமைத் தேர்தல் ஆணையரின் பாதுகாப்புக்கு கூடுதல் வீரர்கள்

போராட்டங்களால் டெல்லியில் அசாதாரண நிலை: தலைமைத் தேர்தல் ஆணையரின் பாதுகாப்புக்கு கூடுதல் வீரர்கள்
Updated on: 
2 min read

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டங்களால் எழுந்த அசாதாரண சூழல் காரணமாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் இசட் பிளஸ் பாதுகாப்பில் கூடுதல் வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.

நாடு முழுவதும் 20 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நிறைவு பெற்றுள்ளது. இதில் 13 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. எஸ்ஐஆர் திருத்தப்

பணியின் போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டார். வாக்குத் திருட்டில் ஈடுபட்ட அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

கடந்த 6-ம் தேதி டெல்லி அசோகா சாலையில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தை இண்டியா கூட்டணி தலைவர்கள், தொண்டர்கள் முற்றுகையிட முயன்றனர். அன்றைய தினம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குக் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டது.

டெல்லி நியூ மோதி பாக் காலனியில் ஞானேஷ் குமாரின் வீடு உள்ளது. கடந்த சில நாட்களாக அந்த வீட்டின் முன்பு இண்டியா கூட்டணி தொண்டர்கள் குவிந்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அவரது வீட்டுக்குப் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டு உள்ளது. உத்தர பிரதேசம் ஆக்ராவின் விஜய் நகரில் ஞானேஷ் குமாரின் பூர்வீக வீடு உள்ளது. அந்த வீட்டை காங்கிரஸ், சமாஜ்வாதி தொண்டர்கள் அண்மையில் முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து ஆக்ரா வீட்டில் மாநில போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

இதனிடையே, ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் தொடங்கப்பட்டது. இண்டியா கூட்டணி மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டங்களால் டெல்லியில் அசாதாரண சூழல் எழுந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து சத்தீஸ்கரில் தீவிரவாதத் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள மத்திய ஆயுத போலீஸ் படையைச் சேர்ந்த (சிஏபிஎப்) 7,000 வீரர்களை டெல்லிக்கு வரவழைக்க மத்திய உள்துறை உத்தரவிட்டு உள்ளது. அவர்கள் நேற்று முதல் விமானங்களில் டெல்லிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

டெல்லி காவல் துறை பாதுகாப்புக்கு 15,000 போலீஸாரை நியமித்துள்ளது. அவர்களோடு இணைந்து சத்தீஸ்கரின் சிஏபிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் காஷ்மீர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்களும் டெல்லிக்கு வரவுள்ளனர்.

தற்போதைய நிலையில் டெல்லி போலீஸார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 20,000 வீரர்கள் டெல்லியின் முக்கிய பகுதிகளில் இரவு, பகலாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அடுத்த சில நாட்களில் மத்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 23,000 வீரர்கள் டெல்லியில் குவிக்கப்பட உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அவருக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இசட் பிளஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இசட் பிளஸ் பாதுகாப்பில் கூடுதல் வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து மத்திய உள்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் (சிஐஎஸ்எப்) சேர்ந்த 50 வீரர்கள் சுழற்சி அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையருக்குப் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். தற்போது அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால் சிஐஎஸ்எப் வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஞானேஷ் குமாரின் வீட்டுக்கு வெளியே டெல்லி போலீஸார் காவல் பணியில் ஈடுபடுவார்கள். அவரது வீட்டு வளாகத்தில் 24 மணி நேரமும் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வார்கள். அவர் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். இவ்வாறு மத்திய உள்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

3-வது நாளாக போராட்டம்

ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் நேற்று 3-வது நாளாகப் போராட்டம் நடைபெற்றது. டெல்லி கன்னாட்பிளேஸில் இருந்து ராகுல் காந்தி உள்ளிட்டோர் பேருந்துகளில் காந்தி நினைவிடத்துக்குச் சென்றனர். அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு இருந்தது.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இந்நிலையில், போராட்டம் இன்று தொடரும் என்பதால், போக்குவரத்து மாற்றம், குறிப்பிட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் போலீஸார் எடுத்து வருகின்றனர்.

போராட்டங்களால் டெல்லியில் அசாதாரண நிலை: தலைமைத் தேர்தல் ஆணையரின் பாதுகாப்புக்கு கூடுதல் வீரர்கள்
‘எல்லாம் நாடகம்’ - எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை சாடிய தெலங்கானா பாஜக செய்தித் தொடர்பாளர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in