

தெலங்கானா மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் என்.வி.சுபாஷ்
ஹைதராபாத்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி நாடு முழுவதும் காங்கிரஸ், இண்டியா கூட்டணி கட்சிகள் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. இந்நிலையில், ‘அதெல்லாம் வெறும் நாடகம்’ என்று தெலங்கானா மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் என்.வி.சுபாஷ் தெரிவித்துள்ளார்.
“ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியினர், இண்டியா கூட்டணி கட்சியினர் என எல்லோரும் சேர்ந்து டெல்லியில் உள்ள வீதிகளில் நாடகம் போட்டு ஊடகத்தின் கவனத்தை பெறுகின்றனர். தேசத்தின் மக்களிடையே இது போன்ற கட்டுக்கதைகள் மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகளின் முயற்சியை பாஜக கண்டிக்கிறது.
தேர்தல் ஆணையம் அதன் பணியை செய்ய அனுமதிக்க வேண்டும். மிக தெளிவான முறையில் எஸ்ஐஆர் நடவடிக்கை நிறுவப்பட்டது. நாடு முழுவதும் அந்த பணி நடைபெறுகிறது.
அடுத்த ஆண்டு (2027) உத்தர பிரதேசம், கோவா, உத்தராகண்ட், பஞ்சாப் மற்றும் மணிப்பூரில் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் எதிர்க்கட்சிகள் தோல்வி அடையும் என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். அதனால் தான் தேர்தல் ஆணையத்தின் மீதும், மோடி அரசு மீதும் பழி சுமத்துகிறார்கள். இதற்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானது. அப்போதும் இதையே தான் செய்தார்கள்.
ராகுல் காந்தி தேசம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டார். ஆனால், தேர்தல் முடிவு அவர்களுக்கு எதிராக வந்தது. இதிலிருந்து தெரியவில்லையா அந்த யாத்திரையில் பங்கேற்றவர்கள் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள் என்று. மக்கள் எங்கள் பக்கம் உள்ளார்கள். காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவர்கள் தேசத்தின் வீதிகளில் இடையூறு ஏற்படுத்துகிறார்கள்” என்று என்.வி.சுபாஷ் தெரிவித்தார்.
தலைநகர் டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி-க்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து தேர்தல் ஆணைய செயல்பாட்டுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அந்த போராட்டம் குறித்து என்.வி.சுபாஷ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.