

புதுடெல்லி: சிஜேபியின் முக்கிய நிர்வாகிகளின் கைது நடவடிக்கையைக் கண்டித்து, அந்த அமைப்பு இன்று நடத்தும் ‘மூவர்ணக் கொடி’ போராட்டத்தையொட்டி, டெல்லி சென்ட்ரல் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையொட்டி, 25,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்ட்ரல் பார்க் மற்றும் ராஜீவ் சவுக் மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிய, கூடுதல் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என போராட்டம் நடத்தி வரும் சிஜேபி கட்சி இன்று (அக்.16) மாலை புதிய போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்டோபர் 16 அன்று மாலை 5 மணிக்கு டெல்லி சென்ட்ரல் பார்க்கில் ‘மூவர்ணக் கொடி’ போராட்டத்தில் பங்கேற்குமாறு மக்களுக்கு அந்த அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கே அழைப்பு விடுத்திருந்தார்.
அபிஜித் தீப்கே கூறுகையில், “சவுரப் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் மூவர்ணக் கொடியை ஏற்றியதற்காகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும். தேசியக் கொடியை ஏற்றுவது குற்றமல்ல.
எனவே, தேசபக்தர்களும் மூவர்ணக் கொடியை நேசிக்கும் அனைவரும் அக்டோபர் 16 அன்று மாலை 5 மணிக்கு டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்குக்கு தேசியக் கொடியுடன் ஒன்று கூடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அங்கு நாம் தேசியக் கொடியை ஏற்றி, மூவர்ணக் கொடியை அசைப்பது குற்றமல்ல என்பதை நிரூபிப்போம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், டெல்லி சென்ட்ரல் பார்க்கில் பொதுமக்கள் கூட வேண்டாம் என டெல்லி போலீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. சிஜேபியின் இந்த பேரணியைக் கருத்தில் கொண்டு, நிர்வாக காரணங்களுக்காக, வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் சென்ட்ரல் பார்க் மூடப்பட்டிருக்கும் என்று டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்தப் பேரணியை முன்னிட்டு டெல்லி காவல் ஆணையர் அனுராக் குமார் தலைமையில் காவல் துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிசிபி (பிஆர்ஓ) நெகா யாதவ், “கன்னாட் பிளேஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கெனவே தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அமைதியை பேணுவதும், யாருக்கும் எந்தவிதமான ஆபத்தும் இல்லாமல், அரசு மற்றும் தனியார் உடமைகளை பாதுக்காப்பதுதான் எங்களின் முதன்மையன நோக்கம்” என்று தெரிவித்தார்.
இதனிடையே போராட்டம் நடத்த வருபவர்களில் குறிப்பிட்ட சிலருக்கு பொருத்தமான இடத்தில் மூவர்ண கொடி ஏற்றி, தேசிய கீதம் பாட அனுமதி வழங்க அனுமதி வழங்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சென்ட்ரல் பார்க்கில் சிசிடிவி கேமிராக்கள் இல்லாத நிலையில் நேற்று (அக்.15) புதிய கேமிராக்களும் ராஜீவ் சவுக் மெட்ரோ நிலையத்தின் 1, 3-வது வாயில்களில் கூடுதல் கேமிராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்றன.
இந்தப் பேரணியை முன்னிட்டு டெல்லியைச் சுற்றி 25,000 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.