2010-க்கு முன்பு சேர்ந்த ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

2010-க்கு முன்பு சேர்ந்த ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
Updated on
2 min read

சென்னை: தமி​ழ​கத்​தில் 2010-ம் ஆண்டு ஆக.23-க்கு முன்பு பணி​யில் சேர்ந்த ஆசிரியர்​களுக்கு, ‘டெட்’ தேர்​வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க மத்​திய அரசு நடவடிக்கை எடுக்க வலி​யுறுத்தி சட்​டப்​பேர​வை​யில் அரசு கொண்டு வந்த தீர்​மானம் ஒரு​மன​தாக நிறை​வேற்​றப்​பட்​டது.

தமிழக சட்​டப்​பேரவை நேற்று காலை கூடியதும், ஆசிரியர்​கள் தொடர்​பான அரசு தனித் தீர்​மானம் கொண்டு வரப்​பட்​டது. அதை முன்​மொழிந்து பள்​ளிக் கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் பேசி​ய​தாவது: ஆசிரியர் பணி என்​பது வெறும் அறிவை போதிக்​கும் தொழில் மட்​டுமல்ல. அது மனித வளத்தை உரு​வாக்​கி, சமூகத்​தின் எதிர்​காலத்​தைச் செதுக்​கும் ஒரு உயரிய பொறுப்​பாகும்.

மேலும், பாடத்​திட்​டங்​களை மாண​வர்​களின் வயது மற்​றும் புரிந்து கொள்​ளும் திற​னுக்கு ஏற்ப எளிமை​யாகக் கற்​பித்​தல், அவர்​களின் கற்​றல் குறை​பாடு​களைக் கண்​டறிந்து நிவர்த்தி செய்​தல், அறிவோடு சேர்த்து நற்​பண்​பு​கள், சமூகப் பொறுப்​பு, ஒழுக்​கம் மற்​றும் தன்​னம்​பிக்​கையை மாண​வர்​களிடம் வளர்த்​தல், ஒவ்​வொரு மாண​வரிட​மும் உள்ள தனித்​து​வ​மான திறமை​களான விளை​யாட்​டு, பேச்​சு, எழுத்​து, அறி​வியல் ஆர்​வம் ஆகிய​வற்​றைக் கண்​டறிந்து ஊக்​கப்​படுத்​துதல் ஆகியவை ஆசிரியர்​களின் தலை​யாயப் பணி​யாக உள்​ளன.

தேசிய ஆசிரியர் கல்விக் குழு​மம் (என்​சிடிஇ) கடந்த 2010-ம் ஆண்டு வெளி​யிட்ட அறிவிக்​கை​யில், இடைநிலை ஆசிரியர் மற்​றும் பட்​ட​தாரி ஆசிரியர் பணி​யிடங்​களில் நியமனம் செய்​ய​வதற்​குரிய தகு​தி​யாக, ஆசிரியர் தகு​தித் தேர்​வில் (டெட்) தேர்ச்சி பெறு​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டது.

ஆசிரியர்​கள் பல ஆண்​டு​களாகக் குறிப்​பாக 15 முதல் 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக, எவ்​வித இடையூறும் இன்றி தங்​களது பணி​யைச் சிறப்​பாக ஆற்றி வரும் வேளை​யில், டெட் தேர்​வில் தேர்ச்சி என்​பது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், பணி​யில் இருக்​கும் ஆசிரியர்​கள், ஆசிரியர் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெற வேண்​டும் என்று கடந்த ஆண்டு செப்​.1-ம் தேதி​யிட்ட உரிமை​யியல் மேல்​முறை​யீட்​டில் உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதனால் தமி​ழ​கத்​தில் சுமார் 3 லட்​சத்து 28,701 பள்ளி ஆசிரியர்​கள், ஆசிரியர் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெற்​றால்​தான் பதவி உயர்​வைப் பெற இயலும். மேலும், தேர்ச்சி பெற​வில்​லை​யெனில் பணி​யிழப்​புக்​கும் ஆளாக நேரிடும் என்ற நிலைக்​குத் தள்​ளப்​பட்​டுள்​ளனர். மேலும் சீராய்வு மனு மீது கடந்த மே 29-ம் தேதி வெளி​யான தீர்ப்​பில், பணி​யில் உள்ள ஆசிரியர்​கள், 2028-ம் ஆண்டு ஆக.31-ம் தேதிக்​குள் டெட் தேர்​வில் தேர்ச்சி பெற வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், 15 முதல் 20 ஆண்​டு​கள் வரை தடை​யின்றி பணி​யாற்றி ஓய்​வு​பெறும் வயதை நெருங்​கிக் கொண்​டிருக்​கும் ஆசிரியர்​களைத், தகு​தித் தேர்வு எழுத வற்​புறுத்​து​வது அவர்​களின் வாழ்​வா​தார உரிமை​யைப் பாதிக்​கும் செய​லாகும்.

எனவே, இந்​தச் சூழ்​நிலை​யைக் கருத்​தில் கொண்​டு, ஆசிரியர்​களின் பணிப் பாது​காப்​பு, நீண்ட கால சேவை, வாழ்​வா​தா​ரம் மற்​றும் நலன் ஆகிய​வற்​றைப் பாது​காக்​கும் நோக்​கில் இத்​தீர்​மானம் கொண்டு வரப்​படு​கிறது. இவ்​வாறு அமைச்​சர் ராஜ்மோகன் பேசி​னார்.

அந்​தத் தீர்​மானத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக பள்​ளி​களில் கடந்த 2010-ம் ஆண்டு ஆக.23-ம் தேதிக்கு முன்​பாக அன்​றைய நடை​முறை​யில் இருந்த விதி​முறை​கள் மற்​றும் தகு​தி​களின் அடிப்​படை​யில் நியமிக்​கப்​பட்ட ஆசிரியர்​களுக்​கு, அவர்​களின் நீண்ட கால பணி அனுபவம் மற்​றும் பணிப் பாது​காப்​பைக் கருத்​தில் கொண்​டு, ஆசிரியர் தகு​தித் தேர்​வில் இருந்து முழு​மை​யான மற்​றும் நிரந்தர விலக்கு அளிப்​ப​தற்கு மத்​திய அரசு உரிய நடவடிக்​கை​களை மேற்​கொள்ள வேண்​டும்.

அதற்​கேற்ப, இலவச மற்​றும் கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டம், 2009-ன் பிரிவு 23-ல், உரிய சட்​டத்திருத்​தம் மேற்​கொண்​டு, 2010-ம் ஆண்டு ஆக.23-ம் தேதிக்கு முன்​பாக நியமிக்​கப்​பட்ட ஆசிரியர்​களுக்கு டெட் தேர்​வில் இருந்து விலக்கு அளிக்​கும் வகை​யில் தேவை​யான சட்​டப்​பூர்வ ஏற்​பாடு​களை மத்​திய அரசு மேற்​கொள்ள வேண்​டும். தேசிய ஆசிரியர் கல்விக் குழு​மம் வழி​யாக இதுதொடர்​பான தெளி​வான மற்​றும் ஒரு​மித்த அதி​காரப்​பூர்வ அறி​வுறுத்​தல் அல்​லது சுற்​றறிக்​கையை உடனடி​யாக வெளி​யிட வேண்​டும்.

இந்த நடவடிக்​கை மூலம், நீண்ட கால​மாகப் பணி​யாற்றி வரும் ஆசிரியர்​களின் பணிப் பாது​காப்பு, பதவி உயர்வு உள்​ளிட்ட பணிப் பலன்​கள் தடை​ இன்றி தொடர்ந்து கிடைப்​பதை உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு தீர்​மானத்​தில் கூறப்​பட்​டுள்​ளது.

இதனைத் தொடர்ந்​து, தீர்​மானத்தை ஆதரித்து திமுக எம்​எல்ஏ எ.வ.வேலு, அதி​முக எம்​எல்ஏ அக்ரி கிருஷ்ண​மூர்த்​தி, காங்​கிரஸ் எம்​எல்ஏ தாரகை கத்​பர்ட், பாமக எம்​எல்ஏ ச.சிவகு​மார், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் எம்​எல்ஏ செல்​வசு​வாமி, இந்​திய கம்​யூனிஸ்ட் எம்​எல்ஏ டி.​ரா​மச்​சந்​திரன் ஆகி​யோர் பேர​வை​யில் பேசி​னர். பின்​னர் குரல் வாக்​கெடுப்​பின் மூலம் ஒரு மனதாக தீர்​​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

ஆண்டுக்கு 3 முறை: பணியில் தொடர தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி​களில் பணியாற்றும் சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆசிரியர் நலனுக்காக 4 மாதங்​களுக்கு ஒன்று வீதம் ஆண்டுக்கு 3 முறை சிறப்பு டெட் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி நடப்பாண்டில் மட்டும் 3 சிறப்பு டெட் தேர்வுகள் நடத்தப்​படும்.

அந்த வகை​யில் முதல் சிறப்பு டெட் தேர்​வுக்​கான அறி​விப்​பாணை கடந்​தாண்டு நவம்​பரில் வெளி​யானது. தொடர்ந்து ஆசிரியர்​களிடம் இருந்து விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டன. அதன்​படி, சிறப்பு டெட் தேர்​வெழுதும் ஆசிரியர்​களுக்கு மாநிலக் கல்​வி​யியல் ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி நிறு​வனம்​ (எஸ்​சிஇஆர்​டி) மூல​மாக இணை​ய​வழி​யில் பயிற்சி வழங்​கப்​பட்​டது.

அதன்​பின்​னர் தமி​ழ​கம் முழு​வதும் சிறப்பு டெட் தேர்வு கடந்த ஜூலை 4, 5-ம் தேதி​களில் நடத்​தப்​பட்​டது. மொத்​தம் 2 தாள்​கள் கொண்ட இத்​தேர்வை சுமார் 2.2 லட்​சம் ஆசிரியர்​கள் எழு​தினர். இவ்​விரு விடைத்​தாள்​கள் மிக​வும் கடின​மாக இருந்​த​தாக ஆசிரியர்​கள் தரப்​பில் குற்​றச்​சாட்​டு​கள் முன்​வைக்​கப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

2010-க்கு முன்பு சேர்ந்த ஆசிரியர்களுக்கு ‘டெட்’ தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
வெற்றி நோட்புக் முதல் வெற்றி உப்பு வரை: தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட 23 அறிவிப்புகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in