46 வருடங்களை கடந்த பாஜகவின் பயணம் - கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நீடிக்கும் ‘தவிப்பு’

பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள தலைமையகத்தில் கட்சி கொடியேற்றிய அதன் தலைவர் நிதின் நபின்

பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள தலைமையகத்தில் கட்சி கொடியேற்றிய அதன் தலைவர் நிதின் நபின்

Updated on
2 min read

புதுடெல்லி: நேற்றுடன் 46 வருடங்களைக் கடந்து தன் 47 ஆவது ஆண்டை கொண்டாடி உள்ளது பாஜக. 21 மாநிலங்களில் பாஜக அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்டிஏ) ஆட்சி அமைத்தும் கேரளா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைத் தொட முடியாத நிலையே நீடிக்கிறது.

பாஜக நேற்று தனது 47 ஆவது நிறுவன நாளைக் கொண்டாடியது. இந்தியாவில், பாஜக அல்லது அதன் கூட்டணியான என்டிஏ இணைந்து 21 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளது. எனினும், தென் இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் அக்கட்சியால் இன்னும் ஆட்சி அமைக்க இயலவில்லை.

கடந்த 1977-ல் அவசரநிலை பிரகடனம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஜனசங்கம் 'ஜனதா கட்சியுடன்' இணைந்தது; ஆயினும், ஏற்பட்ட சித்தாந்த ரீதியான வேறுபாடுகள் காரணமாக, 1980-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி 'பாரதிய ஜனதா கட்சி' உருவாக்கப்பட்டது.

கடந்த 1984-ல் வெறும் இரண்டு மக்களவை தொகுதிகளுடன் பாஜகவின் பயணம் துவங்கியது. இருவரில் ஒருவர், குஜராத்தின் ஏ.கே. படேல்; மற்றொருவர் ஆந்திரப் பிரதேசத்தின் ஹனம்கொண்டாவைச் சேர்ந்த ஜங்கா ரெட்டி. பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை, இந்தியாவின் தேசிய மலர்.

1857-ல் நடைபெற்ற முதல் இந்தியச் சுதந்திரப் போரின்போது, ரொட்டி மற்றும் தாமரை முக்கியச் சின்னங்களாகப் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் , தாமரையை சின்னமாக்கி அதை இந்தியப் பண்பாடு மற்றும் தேசியப் பெருமையுடன் பாஜக தொடர்புபடுத்திப் பார்க்கிறது. பிற கட்சிகளுடனான சித்தாந்த ரீதியிலான தொடர்புகளின் விளைவாகவே பாஜக உருவானது.

இதன் வேரான பாரதிய ஜனசங் 1951-ல் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியால் தொடங்கப்பட்டது. மத்தியில் தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்த முதல் காங்கிரஸ் அல்லாத அரசாக பாஜக உள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில், முழுமையாக ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை (1999-2004) நிறைவு செய்த பாஜக பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்.

2014 முதல் பிரதமர் மோடியின் ஆட்சி துவங்கியது. தற்போது பிரதமராகத் தனது மூன்றாவது பதவிக்காலத்தை அவர் நிறைவு செய்து வருகிறார். தற்போது பாஜக சுமார் 18 கோடி உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. நாட்டின் மிகுந்த செல்வம் கொண்ட கட்சியாகவும் பாஜக கருதப்படுகிறது. ஜனநாயக சீர்திருத்த சங்க அறிக்கையின்படி 2024-25-ம் நிதியாண்டில் அக்கட்சியின் வருமானம் ரூ.6,769 கோடி.

ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா, மிசோரம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், பிஹார், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக அல்லது என்டிஏ அரசுகள் ஆட்சியில் உள்ளன. குஜராத் மாநிலத்தில் பாஜகவின் ஆட்சி கடந்த 31 ஆண்டுகளாகத் தொடர்கிறது. 1995 முதல் குஜராத்தில் தொடரும் பாஜக ஆட்சியில் 2001இல் நரேந்திர மோடி முதல்வராகப் பொறுப்பேற்றார். 2022 சட்டமன்றத் தேர்தலில், பாஜக 156 தொகுதிகளில் வென்று சாதனைப் படைத்தது. குஜராத்தில் பூபேந்திர படேல் முதல்வராக உள்ளார்.

இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சி தொடர்கிறது. இடையில், 2018 முதல் 2020 வரை 15 மாதங்கள் மட்டும் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. ஹரியானாவின் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆட்சி மாறும் என்ற வழக்கமான போக்கை பாஜக முறியடித்தது.

ஹரியானாவில் ’ஹாட்ரிக்’

2014 இல் அங்கு பாஜக ஆட்சி அமைத்தது. மனோகர் லால் கட்டாருக்குப் பிறகு, நாயப் சிங் சைனி தற்போது முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஜாட் மற்றும் தலித் சமூகத்தினரின் ஆதரவுடன், ஹரியானாவில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி அமைத்து பாஜக 'ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளது.

உ.பி.-யில் இந்துத்துவா

கடந்த 2017 முதல் உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசின் ஆட்சி உள்ளது. இந்துத்துவாவை மையமாகக் கொண்டு செயல்பட்ட பாஜக, சமாஜ்வாதி கட்சியின் முஸ்லிம்-யாதவ் எனும் சமன்பாட்டையும், மாயாவதியின் தலித் செல்வாக்கையும் பலவீனப்படுத்தி, மாபெரும் வெற்றி பெற்றது.

அசாமில் சவால்

உ.பி.-யில் 2027 இல் மீண்டும் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளது. தற்போது ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜக போட்டியிடுகிறது. அசாமில், அக்கட்சிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் சவாலை எதிர்கொள்கிறது.

கேரளாவில் திருப்பு முனை?

தமிழ்நாட்டில், அதிமுகவுடன் இணைந்து ஆட்சிக்கு வர பாஜக முயல்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த இரண்டு தேர்தல்களில் கணிசமான வெற்றியை பெற்ற பாஜக, இம்முறை அங்கு ஆட்சி அமைக்கத் தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல், கேரளாவிலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த பாஜக முயன்று வருகிறது.

பிரதமர் மோடி சாதனை

பாஜக பிரதமரான மோடி, மிக நீண்ட காலம் அரசுத் தலைவராகப் பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். குஜராத் முதல்வராகவும், இந்தியப் பிரதமராகவும் அவர் வகித்த பதவிக்காலங்கள் இதுவரை எவரும் வகிக்காதது. முன்னாள் சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங் கொண்டிருந்த 8,930 நாட்கள் என்ற சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

<div class="paragraphs"><p>பாஜக நிறுவன தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள தலைமையகத்தில்&nbsp;கட்சி கொடியேற்றிய அதன் தலைவர் நிதின் நபின்</p></div>
புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு மதுபான விற்பனைக்கு தடை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in