டெல்லி சிறுமி கொடூரக் கொலை முதல் கமல் Vs 'தி கேரளா ஸ்டோரி' இயக்குநர் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மே 29, 2023

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்
Updated on
3 min read

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது சிறுமி கொடூரக் கொலை: தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் அவரது ஆண் நண்பரால் பலரது கண் முன்னால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் ரோஹிணி ஷாபாத் டெய்ரி பகுதியில் நடந்த இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறன. உறுதியான மனம் கொண்டோரையும் உலுக்கிவிடும் அளவுக்கு அந்தக் கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இருபது முறை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவத்தின்போது, அந்தப் பகுதியில் நிறைய மக்கள் நடமாட்டம் இருந்திருந்திருக்கிறது. ஆனால், யாரும் கொலையைத் தடுக்க முன்வரவில்லை. சிசிடிவியில் பதிவாகியுள்ள கொலை ஏற்படுத்தும் பயத்தைவிட, அதைக் கடந்து வெறும் பார்வையாளர்கள் போல் செல்லும் மனிதர்களின் செயல் மிகுந்த பதற்றத்தை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பதைபதைக்க வைக்கும் கொலையைச் செய்த நபரின் பெயர் ஷாஹில் என்பதும், சிறுமியின் பெயர் நிக்கி என்பதும் தெரியவந்துள்ளது. கொலைக்குப் பின்னர் தலைமறைவான ஷாஹிலை போலீஸார் தேடி வந்த நிலையில், அவர் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி சம்பவம்: விசாரணைக் குழு அமைத்தது தேசிய மகளிர் ஆணையம்: டெல்லியில் 16 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து துரிதமாக, நியாயமாக விசாரணை நடத்துமாறு டெல்லி காவல் துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக 3 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்றையும் மகளிர் ஆணையம் அமைத்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவால், "டெல்லி ஷாபாத் டெய்ரி பகுதியில் ஓர் அப்பாவி சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். என் பணிக்காலத்தில் நான் பார்த்திராத அளவிலான வன்முறை இது" என்று கூறியுள்ளார்.

இதனிடையே, டெல்லி சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “டெல்லியில் சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது மிகவும் வருத்தமானது, துரதிர்ஷ்டவசமானது. கிரிமினல்கள் அச்சமற்றவர்களாகிவிட்டனர். காவல் துறை மீதான பயம் போய்விட்டது. துணைநிலை ஆளுநர் அவர்களே, சட்டம் - ஒழுங்கு தங்கள் பொறுப்புதானே. தயவுசெய்து ஏதாவது செய்யுங்கள். டெல்லி மக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது” என்று பதிவிட்டுள்ளார்.

சென்னையில் மாநகர பஸ் ஓட்டுநர்கள் திடீர் ஸ்ட்ரைக் - மக்கள் அவதி: சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதைக் கண்டித்து மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் திங்கள்கிழமை மாலை திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், சென்னையில் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.

ஜப்பானில் 6 நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த ஆறு நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே, ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், உங்களின் நிறுவனங்களுக்கான மிகச்சிறந்த திறமைசாலிகள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழகம் என்று தெரிவித்தார்.

கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு: சிசு பாலின தேர்வு தடைச் சட்டத்தின்படி, சிறப்பு தகுதி பெற்றவர்கள் மட்டுமே கர்ப்பிணி பெண்களுக்கு அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்ப பரிசோதனைகள் செய்ய தகுதி உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அசாம் கார் விபத்தில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி: அசாம் தலைநகர் குவாஹாட்டியில் திங்கள்கிழமை காலை நடந்த சாலை விபத்தில் பொறியியல் படித்துவந்த மாணவர்கள் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

என்விஎஸ்-1 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி எஃப்-12: நாட்டின் வழிகாட்டுதல் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள என்விஎஸ்-1 செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கைக்கோளில் முதல்முறையாக உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணு கடிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தரை, கடல், வான்வெளிப் போக்குவரத்தைக் கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஜந்தர் மந்தரில் போராட அனுமதி இல்லை: டெல்லி போலீஸ்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு இனி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்ற கட்டிடம் அருகே போராட முயன்ற மல்யுத்த வீரர்கள் மற்றும் விவசாயிகள் தடுப்புக்காவலில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரில் 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதல்வர் தகவல்: மணிப்பூரில் கடந்த 4 நாட்களில் 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார். இந்த மோதல் முன்பைப் போல் இரு பிரிவினருக்கு இடையே நடந்தது இல்லை என்றும், இது பாதுகாப்புப் படையினருக்கும், குக்கி போராளிகளுக்கும் இடையேயானது என்றும் அவர் விவரித்துள்ளார்.

கமல்ஹாசன் Vs ‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குநர்: ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறும்போது, "பிரச்சார படங்களுக்கு எதிரானவன் நான். வெறுமனே லோகோவுக்கு பக்கத்தில் ‘இது உண்மைக் கதை’ என எழுதினால் மட்டும் போதாது. அதில் உண்மை இருக்க வேண்டும். தி கேரளா ஸ்டோரி படத்தில் காட்டப்பட்டது உண்மையல்ல” என்று விமர்சித்திருந்தார்.

இதற்கு பதில் தந்துள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென், “நம் நாட்டில் நிறைய முட்டாள்தனமான கற்பிதங்கள் உள்ளன. பாஜகவினருக்கு படம் பிடிக்கிறது என்பாதாலேயே இது அவர்களுடைய படம் என்று அர்த்தம் அல்ல. உலகம் முழுவதும் 37 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இந்தப் படம் பிடித்துள்ளது. அவர்கள் விமர்சிக்க வேண்டுமென்றால், அவர்கள் என்னிடம் நேரடியாக போன் செய்து அதுகுறித்து விவாதிக்கிறார்கள். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. பாசாங்கு, அற்பத்தனம் என்பதைத் தவிர வேறு என்ன வார்த்தைகளைச் சொல்வது?” என்று காட்டமாக கூறியுள்ளார்.

இதனிடையே, “தி கேரளா ஸடோரி ஒரு முழுமையான பிரச்சார படம்தான்” என பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் கருத்து தெரிவித்துள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in