மணிப்பூர் செல்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா: 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதல்வர் தகவல்

மணிப்பூரில் பதற்றமான பகுதிகளில் துணை ராணுவம் குவிப்பு
மணிப்பூரில் பதற்றமான பகுதிகளில் துணை ராணுவம் குவிப்பு
Updated on
1 min read

இம்பால்: மணிப்பூரில் கடந்த 4 நாட்களில் 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில முதல்வர் பைரன் சிங் கூறியுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மணிப்பூர் செல்கிறார்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மேதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குக்கி உள்ளிட்ட பழங்குடியினர் கலவரத்தில் ஈடுபட்டனர் இதில் 70 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.மணிப்பூரில் 3 வாரத்துக்கும் மேலாக ஆங்காங்கே வன்முறையும் பதற்றமும் நீடித்தது. இந்நிலையில் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்கள் நிலவரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பைரன் சிங், "தற்போது நடந்த மோதல் முன்பைப் போல் இரு பிரிவினருக்கு இடையே நடந்தது இல்லை அது பாதுகாப்புப் படையினருக்கும், குக்கி போராளிகளுக்கும் இடையேயானது.

சில இடங்களில் ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் எம்16 ரைஃபில்களுடன் பொதுமக்களை சிலர் தாக்கியுள்ளனர். அவர்கள் குக்கி போராளிகள் கூட இல்லை தீவிரவாதிகள். மாநில போலீஸார் பதற்றமான பகுதியில் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பதில் தாக்குதல், தற்காப்புத் தாக்குதலில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர் இதுவரை 40 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். சிலரை கைதும் செய்துள்ளனர்" என்று கூறினார்.

ஏற்கெனவே உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மணிப்பூரில் உள்ளார். இந்நிலையில் அமித் ஷா இன்று மணிப்பூர் செல்கிறார். அங்கு அமைதியை நிலைநாட்டும் வகையில் முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ளவிருக்கிறார்.

ராணுவத் தளபதி ஆய்வு: முன்னதாக, மணிப்பூரில் நிலைமையை ஆய்வு செய்வதற்காக 2 நாள் பயணமாக ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே இம்பால் சென்றார். பல்வேறு மாவட்டங்களில் பயணம் மேற்கொண்ட அவர், அங்குள்ள கமாண்டர்களுடன் கலந்துரையாடினார். மேலும் சிவில் சமூகத்தினருடன் அவர் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in